இந்தியா ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர் வரும் 17ம் தேதி தொடங்கவுள்ள நிலையில், இந்தியா ஏ மற்றும் ஆஸ்திரேலியா ஏ அணிகளுக்கு இடையேயான 3 நாள் போட்டி சிட்னியில் நடந்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்தியா ஏ அணி, ரஹானேவின் சதம் மற்றும் புஜாராவின் அரைசதம் ஆகியவற்றால் முதல் இன்னிங்ஸில் 247 ரன்களை அடித்தது. இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய ஆஸ்திரேலியா ஏ அணி, கேமரூன் க்ரீனின்(125) சதத்தால் 306 ரன்களை குவித்தது. 

59 ரன்கள் பின் தங்கிய நிலையில், 2வது இன்னிங்ஸை ஆடிய இந்தியா ஏ அணி ரிதிமான் சஹாவின் அரைசதத்தால் 189 ரன்கள் அடித்து டிக்ளேர் செய்தது. 2வது இன்னிங்ஸில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 52 ரன்கள் அடித்த நிலையில் ஆட்டம் முடிந்ததால் போட்டி டிராவில் முடிந்தது. 

2வது இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா ஏ அணியின் தொடக்க வீரரான 22 வயது வில் புகோவ்ஸ்கி 23 ரன்களுக்கு ரிட்டயர்ட் ஹர்ட் ஆகி சென்றார். இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் வார்னருடன் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரராக புகோவ்ஸ்கியை இறக்கலாம் என்ற குரல்கள் எழுந்தது. ஆனால் வார்னருடன் அவரது தற்போதைய ஓபனிங் பார்ட்னர் ஜோ பர்ன்ஸ் தான் தொடக்க வீரராக இறங்குவார். இந்நிலையில், புகோவ்ஸ்கி, இந்திய இளம் ஃபாஸ்ட் பவுலர் கார்த்திக் தியாகியின் பவுன்ஸரில் தலையில் அடிபட்டு 23 ரன்களுக்கு ரிட்டயர்ட் ஹர்ட் ஆகி சென்று கன்கஷனில் இருக்கிறார். 

கார்த்திக் தியாகியின் பவுலிங்கிலேயே தலையில் அடிவாங்கிய புகோவ்ஸ்கி, ஒருவேளை ஆஸி., அணியின் தொடக்க வீரராக இறங்கினால், பும்ரா, ஷமியின் வேகத்தையெல்லாம் சமாளிக்க முடியுமா என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது.