ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரையே வெல்லாமல் இருந்த இந்திய அணி, முதன்முறையாக 2018-2019ல் டெஸ்ட் தொடரை வென்றது. 

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரை வென்று சாதனை படைத்தது. அந்த தொடரை இந்திய அணி வென்றதற்கு முக்கியமான காரணம்.  இந்திய ஃபாஸ்ட் பவுலர்களின் மிரட்டலான ஃபாஸ்ட் பவுலிங் தான். 

இதுவரை இல்லாத அளவிற்கு தலைசிறந்த ஃபாஸ்ட் பவுலிங் யூனிட்டை பெற்றிருக்கிறது இந்திய அணி. பும்ரா - ஷமி - இஷாந்த் சர்மா ஃபாஸ்ட் பவுலிங் கூட்டணி, ஆஸ்திரேலிய வீரர்களை சொந்த மண்ணிலேயே பயந்து நடுங்கவிட்டது. 

பெர்த் டெஸ்ட்டில் ஆஸ்திரேலிய வீரர்கள், இந்திய பவுலிங்கை சமாளிக்க முடியாமல் உடம்பில் தாறுமாறாக அடி வாங்கினர். பெர்த் பிட்ச்சில் பந்து தாறுமாறாக எகிறியது. அதை பயன்படுத்தி அருமையாக வீசிய இந்திய பவுலர்கள், ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களை தங்களது வேகத்தில் மிரட்டினர். 

அடிலெய்டு மற்றும் மெல்போர்னில் நடந்த டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியும் பெர்த்தில் நடந்த டெஸ்ட்டில் ஆஸ்திரேலிய அணியும் வெற்றி பெற்றன. சிட்னி டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. இதையடுத்து 2-1 என டெஸ்ட் தொடரை வென்று வரலாற்று சாதனை படைத்தது இந்திய அணி. 

இந்த தொடரில் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் ஆரோன் ஃபின்ச், மார்கஸ் ஹாரிஸ், கேப்டன் டிம் பெய்ன் ஆகியோர் இந்திய பவுலர்களின் பவுன்ஸரில் தாறுமாறாக அடிவாங்கினர். அதிலும் பும்ராவின் பவுன்ஸரில் மார்கஸ் ஹாரிஸின் ஹெல்மெட் தெறித்த சம்பவத்தை கிரிக்கெட் ரசிகர்கள் அவ்வளவு எளிதாக மறந்திருக்க மாட்டார்கள்.

இந்நிலையில், அந்த தொடர் குறித்த டாக்குமெண்ட்ரியான தி டெஸ்ட்-ல் ஆஸ்திரேலிய வீரர்கள் பலர் பேசியுள்ளனர். அப்போது, பெர்த்தில் நடந்த டெஸ்ட்டில் இந்திய ஃபாஸ்ட் பவுலிங்கை எதிர்கொள்ள தான் பயந்ததாக மார்கஸ் ஹாரிஸ் தெரிவித்துள்ளார். 

“நான் சத்தியமா பயந்துட்டேன்.. ஆம்.. பெர்த் பிட்ச்சில் இந்திய ஃபாஸ்ட் பவுலர்களின் மிரட்டலான பவுலிங்கை எதிர்கொள்ள நான் பயந்தேன். டிவியில் பார்த்திருந்தால் நன்றாக தெரிந்திருக்கும் என்று மார்கஸ் ஹாரிஸ் தெரிவித்துள்ளார்.