பிரிஸ்பேனில் நடந்துவரும் இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் அணி, முதல் இன்னிங்ஸில் வெறும் 240 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதையடுத்து முதல் இன்னிங்ஸை இரண்டாம் நாளான நேற்றைய ஆட்டத்தில் தொடங்கிய ஆஸ்திரேலிய அணி, ஆட்ட முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 312 ரன்களை குவித்திருந்தது. 

ஆஷஸ் தொடரில் படுமோசமாக சொதப்பிய வார்னர், இந்த போட்டியில் ஃபார்முக்கு திரும்பி அபாரமாக ஆடி சதமடித்தார். இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் 151 ரன்களுடன் களத்தில் இருந்தார். அவருடன் அரைசதம் அடித்து லபுஷேனும் களத்தில் நின்றார். 

மூன்றாம் நாளான இன்றைய ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே வார்னர் 154 ரன்களில் யாசிர் ஷாவின் சுழலில் வீழ்ந்தார். அதன்பின்னர் களத்திற்கு வந்த ஸ்மித், வெறும் 4 ரன்களில் நடையை கட்டினார். பின்னர் லபுஷேனுடன் ஜோடி சேர்ந்த மேத்யூ வேட் சிறப்பாக ஆடி அரைசதம் அடிக்க, மறுமுனையில் வழக்கம்போல மிகச்சிறப்பாக ஆடிய லபுஷேன், டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். 

மேத்யூ வேட் 60 ரன்களில் ஆட்டமிழக்க, லபுஷேனுடன் டிராவிஸ் ஹெட் ஜோடி சேர்ந்தார். சதத்திற்கு பின்னரும் பொறுப்புடனும் தெளிவாகவும் சிறப்பாக ஆடிய லபுஷேன் 150 ரன்களை கடந்தார். நிதானமாக ஆடிக்கொண்டிருந்த டிராவிஸ் ஹெட் 24 ரன்களில் ஹாரிஸ் சொஹைலின் பந்தில் ஆட்டமிழந்தார். 

அதன்பின்னர் லபுஷேனுடன் கேப்டன் டிம் பெய்ன் ஜோடி சேர்ந்தார். மூன்றாம் நாளான இன்றைய ஆட்டத்தின் டீ பிரேக் வரை ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 532 ரன்கள் அடித்திருந்தது. டீ பிரேக் முடிந்து லபுஷேனும் பெய்னும் களத்திற்கு வந்தனர். இரட்டை சதத்தை நோக்கி லபுஷேன் ஆடிக்கொண்டிருக்க, இன்னிங்ஸின் 149வது ஓவரில் டிம் பெய்ன் ஆட்டமிழந்தார். 

இதையடுத்து 151வது ஓவரில் ஷாஹீன் அஃப்ரிடியின் பந்தில் 185 ரன்களுக்கு ஆட்டமிழந்து இரட்டை சதத்தை தவறவிட்டார் லபுஷேன். அதன்பின்னர் மிட்செல் ஸ்டார்க், கம்மின்ஸ், ஹேசில்வுட் ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, 158வது ஓவரில் ஆஸ்திரேலிய அணி 580 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 149வது ஓவரில் 6வது விக்கெட்டை இழந்த ஆஸ்திரேலிய அணி, அடுத்த 9 ஓவர்களில் எஞ்சிய 4 விக்கெட்டுகளையும் இழந்து 580 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 

பாகிஸ்தான் அணியை விட முதல் இன்னிங்ஸில் 340 ரன்கள் முன்னிலை பெற்றது ஆஸ்திரேலியா. 340 ரன்கள் பின் தங்கிய நிலையில், இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கி ஆடிவருகிறது பாகிஸ்தான் அணி. பாகிஸ்தான் அணியின் சார்பில் அதிகபட்சமாக யாசிர் ஷா 4 விக்கெட்டுகளையும் ஷாஹீன் அஃப்ரிடி மற்றும் ஹாரிஸ் சொஹைல் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.