மான்செஸ்டரில் நடந்துவரும் ஆஷஸ் தொடரின் நான்காவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது. கடைசி நாளான இன்றைய ஆட்டத்தில் தோல்வியை தவிர்க்க இங்கிலாந்து அணி கடுமையாக போராடியாக வேண்டும். 

ஆஷஸ் தொடரின் நான்காவது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 497 ரன்களை குவிக்க, இங்கிலாந்து அணி 301 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 196 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய ஆஸ்திரேலிய அணி, இரண்டாவது இன்னிங்ஸை 186 ரன்களுக்கு டிக்ளேர் செய்தது. 

இரண்டாவது இன்னிங்ஸிலும் வார்னர் டக் அவுட்டாகி ஏமாற்றமளித்தார். மார்கஸ் ஹாரிஸ் மற்றும் லபுஷேனும் சோபிக்கவில்லை. ஆனால் வழக்கம்போலவே ஸ்மித் அபாரமாக ஆடினார். இந்த போட்டியில் வெல்ல வேண்டுமானால் விரைவில் ரன்களை குவித்துவிட்டு இங்கிலாந்து அணியை முடிந்தளவிற்கு விரைவில் பேட்டிங் ஆட விட வேண்டும் என்பதை உணர்ந்து அதிரடியாக ஆடி ரன்களை குவித்தார் ஸ்மித். 

முதல் இன்னிங்ஸில் இரட்டை சதமடித்த ஸ்மித், இரண்டாவது இன்னிங்ஸிலும் அரைசதம் அடித்தார். 82 ரன்களை குவித்து ஸ்மித் ஆட்டமிழந்தார். இந்த இன்னிங்ஸிலும் சதமடித்திருக்கலாம். ஆனால் வெற்றியை கருத்தில்கொண்டு அணிக்காக ஆடினார். நேற்றைய ஆட்டம், நான்காம் நாள் ஆட்டம் என்பதால், விரைவில் முடிந்தவரை ரன் குவித்துவிட்டு இங்கிலாந்தை ஆடவிட்டால்தான் வெற்றி பெற முடியும் என்பதால், ஆஸ்திரேலிய வீரர்கள் அடித்து ஆடி ரன் சேர்த்தனர். 

6 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்கள் அடித்த நிலையில், இரண்டாவது இன்னிங்ஸை ஆஸ்திரேலிய அணி டிக்ளேர் செய்ய, 383 ரன்கள் என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் பர்ன்ஸை முதல் ஓவரின் மூன்றாவது பந்திலேயே பாட் கம்மின்ஸ் வீழ்த்தினார். இதையடுத்து களத்திற்கு வந்த இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட், அடுத்த பந்திலேயே ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். 

முதல் ஓவரிலேயே முக்கியமான 2 விக்கெட்டுகளை இழந்துவிட்ட நிலையில், டென்லியுடன் ஜேசன் ராய் ஜோடி சேர்ந்தார். நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 2 விக்கெட் இழப்பிற்கு 18 ரன்கள் அடித்துள்ளது. கடைசி நாளான இன்றைய ஆட்டத்தில் இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு 365 ரன்கள் தேவை. இதை அடிப்பது இயலாத காரியம். ஆனால் ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக்கு 8 விக்கெட்டுகள்தான் தேவை. கடைசி நாள் ஆட்டத்தில் 8 விக்கெட்டுகளை வீழ்த்துவது கடினமான விஷயம் அல்ல. எனவே ஆஸ்திரேலிய அணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. இங்கிலாந்து அணி தோல்வியை தவிர்க்க கடுமையாக போராடியாக வேண்டும். ஆனால் தோல்வியை தவிர்க்க வாய்ப்பேயில்லை என்பதே உண்மை.