உலக கோப்பை இன்னும் 3 நாட்களில் தொடங்க உள்ள நிலையில், பயிற்சி போட்டிகள் நடந்துவருகின்றன. இந்த உலக கோப்பையை இந்தியா அல்லது இங்கிலாந்து தான் வெல்லும் என்பதே பெரும்பாலான ஜாம்பவான்களின் கணிப்பு. 

உலக கோப்பை இங்கிலாந்தில் நடப்பது அந்த அணிக்கு கூடுதல் பலம். இங்கிலாந்து மற்றும் இந்தியா ஆகிய இரு அணிகளுமே சமபலம் வாய்ந்த அணிகளாக உள்ளன. ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, பாகிஸ்தான் ஆகிய அணிகளும் வலுவாக உள்ளன. 

1992ம் ஆண்டுக்கு பிறகு இந்த உலக கோப்பையில் தான் லீக் சுற்றில் அனைத்து அணிகளும் அனைத்து அணிகளுடனும் மோதுகின்றன. அதனால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. மேலும் இங்கிலாந்து ஆடுகளங்கள் அனைத்தும் பேட்டிங்கிற்கு சாதகமாக உருவாக்கப்பட்டுள்ளன. ஒரு இன்னிங்ஸில் 500 ரன்கள் அடிக்க வாய்ப்பிருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது. 

எனவே இந்த உலக கோப்பை ஒரு ஹை ஸ்கோரிங் உலக கோப்பையாக அமைய உள்ளது தெளிவாகிவிட்டது. இப்படியான ஹை ஸ்கோரிங் தொடரில் பவுலர்கள் சிறப்பாக செயல்பட்டு எதிரணியின் ஸ்கோரை முடிந்தவரை கட்டுப்படுத்துவது அவசியம். அந்த வகையில் இந்திய அணி இந்த உலக கோப்பையின் சிறந்த அணிதான். 

இந்திய அணியில் முன்னெப்போதும் இல்லாத வகையில் பவுலிங் யூனிட் சிறப்பாக இருப்பது இந்திய அணிக்கு கூடுதல் பலம். தொடக்க மற்றும் டெத் ஓவர்களை பும்ரா பார்த்துக்கொள்வார். மிடில் ஓவர்களில் குல்தீப்பும் சாஹலும் இணைந்து எதிரணிகளின் பேட்டிங் வரிசையை சரித்துவிடுவர். இதுதான் கடந்த இரண்டு ஆண்டுகளாக நடந்துள்ளது. 

உலகின் நம்பர் 1 பவுலரான பும்ரா, தொடக்கத்திலும் டெத் ஓவர்களிலும் சிறப்பாக வீசக்கூடியவர். பும்ரா தான் இந்தியாவுக்கும் எதிரணிக்கும் இடையேயான பெரிய வித்தியாசமாக அமைவார் என்பதில் ஆச்சரியமில்லை. அவரது வேகத்தையும் வேரியேஷனையும் சமாளிக்க முடியாமல் எதிரணி வீரர்கள் திணறுகின்றனர். உலக கோப்பையில் பும்ரா இந்திய அணியின் நட்சத்திர வீரராக ஜொலித்து முக்கிய பங்காற்றவுள்ளார் என்பதில் சிறிதும் சந்தேகமேயில்லை. 

ஷமியும் நல்ல ஃபார்மில் உள்ளார். ஸ்விங் கண்டிஷனில் புவனேஷ்வர் குமார் மிரட்டிவிடுவார். இவ்வாறு இந்திய அணியின் பவுலிங் சிறப்பாக உள்ளது. இந்நிலையில், உலக கோப்பை குறித்து பேசியுள்ள ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் இயன் சேப்பல், உலக கோப்பையில் இந்திய அணியின் பவுலிங் இந்த உலக கோப்பையில் மிகப்பெரிய பலம் என தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து பேசிய இயன் சேப்பல், இந்த உலக கோப்பையில் விக்கெட்டுகளை வீழ்த்துவதுதான் ஒரு அணியின் வெற்றிக்கு முக்கிய காரணியாக அமையும். அந்த வகையில் இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா சிறந்து விளங்குகின்றன. குறிப்பாக இந்திய அணி பவுலிங்கில் நல்ல வெரைட்டி உள்ளது. ஆடுகளத்தில் ஈரப்பதம் இருக்கும்பட்சத்தில் ஃபாஸ்ட் பவுலர்களான பும்ரா, புவனேஷ்வர் குமார், ஷமி ஆகிய மூவரும் எதிரணிகளை பேட்ஸ்மேன்களை தெறிக்கவிடுவர். அதேநேரத்தில் ஆடுகளம் வறண்டு இருந்தால் ஸ்பின்னர்களான குல்தீப்பும் சாஹலும் ஆதிக்கம் செலுத்துவர். ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவும் இருக்கிறார். அந்தவகையில் பவுலிங்கை பொறுத்தவரை இந்திய கேப்டன் விராட் கோலிக்கு நிறைய ஆப்சன்கள் உள்ளன என்று இயன் சேப்பல் தெரிவித்துள்ளார்.