ஐசிசி மகளிர் உலக கோப்பை அரையிறுதியில் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி ஆஸ்திரேலிய மகளிர் அணி ஃபைனலுக்கு முன்னேறியது. 

ஐசிசி மகளிர் உலக கோப்பை தொடர் நியூசிலாந்தில் நடந்துவரும் நிலையில், இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ், தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து ஆகிய 4 மகளிர் அணிகளும் அரையிறுதிக்கு முன்னேறின.

முதல் அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. மழை காரணமாக போட்டி 45 ஓவர்களாக குறைத்து நடத்தப்பட்டது.

ஆஸி.,மகளிர் அணி முதலில் பேட்டிங்:

முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய மகளிர் அணியின் தொடக்க வீராங்கனைகள் ஹீலி - ஹெய்ன்ஸ் ஆகிய இருவரும் அபாரமாக பேட்டிங் ஆடி முதல் விக்கெட்டுக்கு 216 ரன்களை குவித்தனர். ஹெய்ன்ஸ் 86 ரன்களுக்கு ஆட்டமிழக்க, சிறப்பாக ஆடிய ஹீலி சதமடித்தார். 129 ரன்கள் அடித்தார் ஹீலி.

அதன்பின்னர் மூனி 43 ரன்களும், கேப்டன் லானிங் 26 ரன்களும் அடித்து கடைசி வரை களத்தில் நிற்க, 45 ஓவர்களில் 305 ரன்களை குவித்தது ஆஸ்திரேலிய மகளிர் அணி.

பேட்டிங்கில் சொதப்பி படுதோல்வி அடைந்த வெஸ்ட் இண்டீஸ்:

45 ஓவர்களில் 306 ரன்கள் என்ற கடின இலக்கை விரட்டிய வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணியில் கேப்டன் ஸ்டாஃபெனி டெய்லர் அதிகபட்சமாக 48 ரன்கள் அடித்தார். தொடக்க வீராங்கனை டாட்டின் மற்றும் ஹேலி மேத்யூஸ் ஆகிய இருவரும் தலா 34 ரன்கள் அடித்தனர். மற்ற அனைவருமே சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, 37.1 ஓவரில் வெறும் 148 ரன்களுக்கு வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி ஆல் அவுட்டானது.

இதையடுத்து 157 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய மகளிர் அணி ஃபைனலுக்கு முன்னேறியது. நாளை(மார்ச் 31) நடக்கும் 2வது அரையிறுதியில் தென்னாப்பிரிக்காவும் இங்கிலாந்தும் மோதுகின்றன. அதில் வெற்றி பெறும் அணி வரும் ஏப்ரல் 3ம் தேதி கிறிஸ்ட்சர்ச்சில் நடக்கும் ஃபைனலில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ளும்.