உலக கோப்பை தொடரில் இலங்கை - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான போட்டியில் இலங்கை அணியை 87 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. 

இலங்கை - ஆஸ்திரேலியா ஆகிய அணிகளுக்கு இடையேயான போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை கேப்டன் கருணரத்னே, ஆஸ்திரேலிய அணியை முதலில் பேட்டிங் செய்ய பணித்தார்.

ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் வார்னர் மந்தமாக தொடங்கி மந்தமாகவே ஆடினார். ஆனால் மறுமுனையில் ஆரோன் ஃபின்ச் அதிரடியாக ஆடினார். 48 பந்துகளில் 26 ரன்கள் மட்டுமே அடித்து ஆட்டமிழந்தார். உஸ்மான் கவாஜாவும் 10 ரன்களில் ஆட்டமிழக்க, அதன்பின்னர் களத்திற்கு வந்த ஸ்மித், ஃபின்ச்சுக்கு ஒத்துழைப்பு அபாரமாக ஆடினார். ஆரோன் ஃபின்ச் அபாரமாக ஆடி சதமடித்தார். ஸ்மித்தும் அரைசதம் கடந்தார். சதமடித்த பிறகும் அதிரடியை தொடர்ந்த ஃபின்ச், 153 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து ஸ்மித்தும் 73 ரன்களில் ஆட்டமிழந்தார். 

அதன்பின்னர் மேக்ஸ்வெல்லை தவிர மற்ற எந்த பின்வரிசை பேட்ஸ்மேன்களும் சரியாக ஆடவில்லை. மேக்ஸ்வெல்லின் கடைசி நேர அதிரடி ஆஸ்திரேலிய அணியின் ஸ்கோரை உயர்த்தியது. 26 பந்துகளில் மேக்ஸ்வெல் 45 ரன்களை குவித்தார். 50 ஓவர் முடிவில் ஆஸ்திரேலிய அணி, 334 ரன்களை குவித்தது. 

335 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணியின் தொடக்க வீரர்கள் கருணரத்னே மற்றும் குசால் பெரேரா ஆகிய இருவரும் அபாரமான தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். தொடக்கம் முதலே ஆஸ்திரேலிய அணியின் பவுலிங்கை அடித்து ஆடினர். இருவருமே அரைசதம் அடித்து முதல் விக்கெட்டுக்கு 115 ரன்களை குவித்தனர். குசால் பெரேரா 52 ரன்களில் ஆட்டமிழக்க, அதன்பின்னர் கருணரத்னேவுடன் திரிமன்னே ஜோடி சேர்ந்தார்.

திரிமன்னே 16 ரன்களில் ஆட்டமிழந்தார். சிறப்பாக ஆடி ரன்களை குவித்துக்கொண்டிருந்த இலங்கை கேப்டன் கருணரத்னே, 97 ரன்கள் குவித்து சதத்தை 3 ரன்களில் தவறவிட்டு ஆட்டமிழந்தார். இலங்கை அணியின் ஸ்கோர் 32 ஓவரில் 186 ரன்களாக இருந்தபோது கருணரத்னே அவுட்டானார். அதன்பின்னர் வந்த இலங்கை அணியின் பேட்ஸ்மேன்கள் சீரான இடைவெளியில் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்து கொண்டேயிருந்தனர். அனுபவ வீரர்கள் மேத்யூஸ் மற்றும் திசாரா பெரேராவும் ஏமாற்றினர். இதையடுத்து 46வது ஓவரில் 247 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதையடுத்து 87 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் 8 புள்ளிகளை பெற்றுள்ள ஆஸ்திரேலிய அணி, புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.