Asianet News TamilAsianet News Tamil

2வது டெஸ்ட்டிலும் ஆஸ்திரேலிய அணி இன்னிங்ஸ் வெற்றி.. படுதோல்வியுடன் நாடு திரும்பும் பாகிஸ்தான்

ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் இடையேயான இரண்டாவது டெஸ்ட்டில் இன்னிங்ஸ் மற்றும் 48 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்றது. 
 

australia beat pakistan by innings difference in second test and win series
Author
Adelaide SA, First Published Dec 2, 2019, 3:01 PM IST

ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி இன்னிங்ஸ் மற்றும் 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து இரண்டாவது டெஸ்ட் போட்டி அடிலெய்டில் பகலிரவு டெஸ்ட் போட்டியாக நடந்தது. 

இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் டேவிட் வார்னரும் லபுஷேனும் அபாரமாக ஆடினர். இரண்டாவது விக்கெட்டுக்கு இருவரும் இணைந்து 361 ரன்களை குவித்தனர். முதல் போட்டியில் இரட்டை சதத்தை தவறவிட்ட லபுஷேன், இந்த போட்டியிலும் 162 ரன்களில் ஆட்டமிழந்து இரட்டை சதத்தை தவறவிட்டார். 

ஆனால் இந்த முறை வார்னர் அந்த தவறை செய்யவில்லை. அபாரமாக ஆடி இரட்டை சதமடித்த வார்னர், அதன்பின்னர் மளமளவென ஸ்கோரை உயர்த்தினார். 250 ரன்களை கடந்த வார்னர், விரைவாக 300 ரன்களையும் எட்டினார். தனது முதல் முச்சதத்தை பதிவு செய்த வார்னர், 400 ரன்களை நோக்கி அதிரடியாக ஆடினார். ஆனால் போட்டியில் வெல்ல வேண்டும் என்பதால், அணியின் நலன் கருதி, வார்னர் 335 ரன்கள் இருக்கும்போது, அணியின் ஸ்கோர் 589 ரன்களாக இருந்தபோது கேப்டன் டிம் பெய்ன் டிக்ளேர் செய்தார். முதல் இன்னிங்ஸை ஆஸ்திரேலிய அணி 589 ரன்களுக்கு டிக்ளேர் செய்ய, இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடியது பாகிஸ்தான் அணி. 

australia beat pakistan by innings difference in second test and win series

முதல் இன்னிங்ஸை தொடங்கிய பாகிஸ்தான் வீரர்கள், இதே பிட்ச்சில்தான் ஆஸ்திரேலிய வீரர்கள் ஆடினார்களா என்ற சந்தேகம் எழுமளவிற்கு மளமளவென விக்கெட்டுகளை இழந்தனர். 5வது ஓவரிலேயே தொடக்க வீரர் இமாம் உல் ஹக்கை மிட்செல் ஸ்டார்க் வெறும் 2 ரன்னில் வீழ்த்தினார். இதையடுத்து கேப்டன் அசார் அலியை 9 ரன்களில் கம்மின்ஸும் ஷான் மசூத்தை ஹேசில்வுட்டும் வீழ்த்தினர். 

38 ரன்களுக்கே 3 விக்கெட்டுகளை இழந்துவிட்டது பாகிஸ்தான் அணி. அதன்பின்னர் ஆசாத் ஷாஃபிக்கை 9 ரன்களில் வீழ்த்திய ஸ்டார்க், இஃப்டிகார் அகமது மற்றும் முகமது ரிஸ்வான் ஆகிய இருவரையும் ஒரே ஓவரில் வீழ்த்தினார். 24வது ஓவரில் ஆசாத்தை வீழ்த்திய ஸ்டார்க், 32வது ஓவரில் இஃப்டிகாரையும் ரிஸ்வானையும் வீழ்த்தினார். 89 ரன்களுக்கே பாகிஸ்தான் அணி 6 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் வழக்கம்போல நிலைத்து நின்று சிறப்பாக ஆடிய பாபர் அசாம் 97 ரன்களை குவித்து 3 ரன்களில் சதத்தை தவறவிட்டு ஆட்டமிழந்தார். ஆனால் அவர் தவறவிட்ட சதத்தை யாசிர் ஷா அடித்து அசத்தினார். 

பொறுப்பாக ஆடிய யாசிர் ஷா, தனது சிறப்பான பேட்டிங் திறனை வெளிப்படுத்தி சதமடித்தார். 113 ரன்களை குவித்தார் யாசிர் ஷா. மற்றவர்கள் யாருமே சரியாக ஆடவில்லை. இதையடுத்து முதல் இன்னிங்ஸில் 302 ரன்களுக்கு ஆல் அவுட்டான பாகிஸ்தான் அணி, ஃபாலோ ஆன் பெற்று இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்தது. 

australia beat pakistan by innings difference in second test and win series

இரண்டாவது இன்னிங்ஸில் தொடக்க வீரர் ஷான் மசூத்தும் ஆசாத் ஷாஃபிக்கும் மட்டுமே அரைசதம் அடித்தனர். இந்த இன்னிங்ஸில் நட்சத்திர வீரர் பாபர் அசாம் 8 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். இரண்டாவது இன்னிங்ஸில் பொதுவாக சிறப்பாக பந்துவீசி எதிரணி விக்கெட்டுகளை வீழ்த்தி குவிக்கும், நாதன் லயன் இந்த இன்னிங்ஸிலும் அதை கரெக்ட்டாக செய்தார். 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார் நாதன் லயன். இரண்டாவது இன்னிங்ஸில் பாகிஸ்தான் அணியின் பேட்டிங் ஆர்டர் மளமளவென சரிந்து வெறும் 239 ரன்களுக்கு அந்த அணி ஆல் அவுட்டானது. 

இதையடுத்து இன்னிங்ஸ் மற்றும் 48 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி 2-0 என டெஸ்ட் தொடரை வென்றது. மேலும் இந்த வெற்றிக்கு 60 புள்ளிகளை பெற்ற ஆஸ்திரேலிய அணி, ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் 176 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்திய அணி 360 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. 
 

Follow Us:
Download App:
  • android
  • ios