மகளிர் டி20 உலக கோப்பை ஆஸ்திரேலியாவில் நடந்துவருகிறது. “ஏ” பிரிவில் இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, வங்கதேசம், இலங்கை ஆகிய அணிகளும் “பி”பிரிவில் இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான் மற்றும் தாய்லாந்து ஆகிய அணிகளும் இடம்பெற்று ஆடின. 

இதில் “ஏ” பிரிவில் ஆடிய இந்திய அணி, லீக் சுற்றில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இலங்கை, வங்கதேசம் ஆகிய 4 அணிகளையுமே வீழ்த்தி முதல் அணியாக அரையிறுதிக்கு நுழைந்தது. வங்கதேசம் மற்றும் இலங்கை ஆகிய 2 அணிகளையும் வீழ்த்திய ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இரண்டுமே இந்தியாவிடம் தோற்றன. இந்நிலையில், ஏ பிரிவில் இருந்து அரையிறுதிக்கு முன்னேறப்போகும் இரண்டாவது அணி எது என்பதை தீர்மானிக்கும் போட்டியில் ஆஸ்திரேலியாவும் நியூசிலாந்தும் மோதின. 

இந்த போட்டியில் வென்றால்தான் அரையிறுதிக்கு முன்னேற முடியும் என்ற கட்டாயத்தில் இரு அணிகளும் களம் கண்டன. முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணி, 20 ஓவரில் 155 ரன்கள் அடித்தது. 156 ரன்கள் என்ற இலக்குடன்ன் ஆடிய நியூசிலாந்து அணி, முதல் 10 ஓவரில் மந்தமாக ஆடி பந்துக்கு நிகரான ரன்கள் மட்டுமே அடித்திருந்தது. 

ஆனால் கடைசி 10 ஓவர்களில் இலக்கை விரட்டும் முனைப்பில் ஆடிய நியூசிலாந்து வீராங்கனைகள், சிறப்பாக ஆடி ஸ்கோரை உயர்த்தினர். ஆனால் சீரான இடைவெளியில் நியூசிலாந்து அணி விக்கெட்டுகளை இழந்துகொண்டே இருந்ததால், அந்த அணியால் இலக்கை எட்ட முடியவில்லை. கடைசி ஓவரில் நியூசிலாந்தின் வெற்றிக்கு 20 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், அந்த அணி 15 ரன்கள் மட்டுமே அடித்தது. இதையடுத்து 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி அரையிறுதி போட்டிக்கு முன்னேறியது. 

Also Read - உங்க பசங்க பண்றது கொஞ்சம் கூட சரியில்ல.. கேப்டன் கோலியை அழைத்து கண்டித்த அம்பயர்

ஏ பிரிவிலிருந்து இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன. பி பிரிவில் இங்கிலாந்தும் தென்னாப்பிரிக்காவும் அரையிறுதிக்கு முன்னேறுவது உறுதியாகிவிட்டது. ஆனால் முதலிடத்தில் எந்த அணி இரண்டாவது இடத்தில் எந்த அணி என்பது மட்டும் உறுதியாக வேண்டும். தென்னாப்பிரிக்க அணி அதன் கடைசி லீக் போட்டியில் வெஸ்ட் இண்டீஸை எதிர்கொள்கிறது. அந்த போட்டியில் தென்னாப்பிரிக்கா வென்றால், லீக் சுற்றின் முடிவில் முதலிடத்தை பிடித்து, அரையிறுதியில் ஆஸ்திரேலியாவுடன் மோதும். வெஸ்ட் இண்டீஸிடம் தென்னாப்பிரிக்கா தோற்றால், அரையிறுதியில் இந்தியாவை எதிர்கொள்ள நேரிடும்.