இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்ற நிலையில், 2வது ஒருநாள் போட்டி சிட்னியில் இன்று நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணி 389 ரன்களை குவித்தது.

இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான 2வது ஒருநாள் போட்டி சிட்னியில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணி ஐம்பது ஓவரில் 389 ரன்களை குவித்தது. முதல் விக்கெட்டுக்கு வார்னரும் ஃபின்ச்சும் இணைந்து 23 ஓவரில் 142 ரன்களை குவித்து நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். ஃபின்ச் 60 ரன்களும் வார்னர் 83 ரன்களும் அடித்தனர். 

அதன்பின்னர் ஸ்மித்தின் அதிரடி சதம்(104), மேக்ஸ்வெல்லின் காட்டடி(29 பந்தில் 63 ரன்கள்), லபுஷேனின் அரைசதம்(70) ஆகியவற்றால் 389 ரன்கள் என்ற மெகா ஸ்கோரை அடித்தது ஆஸ்திரேலியா. 

390 ரன்கள் என்ற கடின இலக்கை விரட்டிய இந்திய அணியின் தொடக்க வீரர்கள் மயன்க் அகர்வாலும் தவானும் இணைந்து 58 முதல் விக்கெட்டுக்கு  58 ரன்களை சேர்த்தனர். மயன்க் அகர்வால் 28 ரன்கள் அடித்து ஆட்டமிழக்க, தவானும் 30 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

அதன்பின்னர் கேப்டன் கோலியும் ஷ்ரேயாஸ் ஐயரும் இணைந்து சிறப்பாக ஆடினர். ஆனால் ஷ்ரேயாஸ் ஐயர் 38 ரன்களுக்கு ஆட்டமிழக்க, சிறப்பாக ஆடிய சேஸிங் கிங்கான விராட் கோலி அரைசதம் கடந்து சதத்தை நெருங்கினார். ஆனால் 88 ரன்களுக்கு ஹேசில்வுட்டின் பந்தில் ஹென்ரிக்ஸின் அபாரமான கேட்ச்சால் ஆட்டமிழந்து வெளியேறினார். கோலி தவறவிட்டது சதத்தை மட்டுமல்ல; இந்திய அணியின் வெற்றியையும்தான்.

கோலி ஆட்டமிழந்த பின்னர், ராகுலும் ஹர்திக் பாண்டியாவும் இருந்தாலும், அவர்களால் 390 ரன்கள் என்ற மிகக்கடினமான இலக்கை விரட்ட முடியவில்லை. அரைசதம் அடித்த ராகுல் 76 ரன்கள் அடித்து ஆட்டமிழக்க, ஹர்திக் பாண்டியா 28 ரன்கள் மட்டுமே அடித்தார். 11 பந்தில் அதிரடியாக ஆடி 24 ரன்களை விளாசி ஜடேஜாவும் ஆட்டமிழந்தார். இதையடுத்து ஐம்பது ஓவரில் 338 ரன்கள் அடித்த இந்திய அணி 51 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. 

இந்த போட்டியில் வென்றதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-0 என ஆஸ்திரேலிய அணி வென்றது.