ஐசிசி மகளிர் உலக கோப்பை தொடரில் இந்திய மகளிர் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலியா மகளிர் அணி அபார வெற்றி பெற்றது.
இந்தியா மகளிர் - ஆஸ்திரேலியா மகளிர் அணிகள் மோதல்:
ஐசிசி மகளிர் உலக கோப்பை தொடர் நியூசிலாந்தில் நடந்துவருகிறது. இந்தியா - ஆஸ்திரேலியா மகளிர் அணிகளுக்கு இடையேயான போட்டி ஆக்லாந்தில் இன்று நடந்தது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் ஆடிய இந்திய மகளிர் அணியில், யாஸ்திகா பாட்டியா (59), கேப்டன் மிதாலி ராஜ் (68) மற்றும் ஹர்மன்ப்ரீத் கௌர் (57) ஆகிய மூவரும் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தனர். பின்வரிசையில் பூஜா வஸ்ட்ராகர் 28 பந்தில் ஒரு பவுண்டரி மற்றும் 2 சிக்ஸருடன் 34 ரன்கள் அடிக்க, 50 ஓவரில் 277 ரன்களை குவித்தது இந்திய மகளிர் அணி.
இதையும் படிங்க - IPL 2022: ஐபிஎல் முதல் வாரத்தில் எந்தெந்த வெளிநாட்டு வீரர்கள் ஆடவில்லை..? முழு பட்டியல் இதோ
ஆஸ்திரேலியா அபார வெற்றி:
278 ரன்கள் என்ற சவாலான இலக்கை விரட்டிய ஆஸ்திரேலிய மகளிர் அணியின் தொடக்க வீராங்கனைகள் ரேச்சல் ஹெய்ன்ஸ் மற்றும் அலைசா ஹீலி ஆகிய இருவரும் இணைந்து அபாரமாக விளையாடி முதல் விக்கெட்டுக்கு 121 ரன்களை குவித்து நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். அபாரமாக விளையாடி அரைசதம் அடித்த ஹீலி 72 ரன்களில் ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து ஹெய்ன்ஸ் 43 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இதையும் படிங்க - MS Dhoni: ஜெர்சி எண் 7-ன் ரகசியத்தை சொன்ன தோனி
அதன்பின்னர் மிகச்சிறப்பாக ஆடிய ஆஸ்திரேலிய மகளிர் அணியின் கேப்டன் மெக் லானிங் 97 ரன்களை குவித்தார். 3 ரன்னில் சதத்தை தவறவிட்டு அவர் ஆட்டமிழந்தாலும், ஆஸ்திரேலிய அணியை வெற்றிக்கு அருகில் அழைத்து சென்றுவிட்டார். அவர் ஆட்டமிழந்த பின்னர் ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக்கு 8 பந்தில் 8 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. அதை எளிதாக அடித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய மகளிர் அணி அபார வெற்றி பெற்றது.
