ஆஷஸ் தொடரின் 3வது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்று இன்னிங்ஸ் மற்றும் 14 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி 3-0 என ஆஷஸ் டெஸ்ட் தொடரை வென்றது. 

ஆஸ்திரேலியா - இங்கிலாந்து இடையேயான பாரம்பரியமான ஆஷஸ் தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்துவருகிறது. 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரின் முதலிரண்டு போட்டிகளிலும் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று 2-0 என முன்னிலை வகித்த நிலையில், 3வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நடந்தது. 

முதல் 2 போட்டிகளிலும் படுமட்டமாக விளையாடிய இங்கிலாந்து அணி, மெல்போர்னில் கடந்த 26ம் தேதி தொடங்கி நடந்த பாக்ஸிங் டே டெஸ்ட்டிலும் படுமட்டமாகவே பேட்டிங் ஆடியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்ய, முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணி வெறும் 185 ரன்களுக்கு முதல் இன்னிங்ஸில் ஆல் அவுட்டானது. அந்த அணியின் கேப்டன் ஜோ ரூட் மட்டுமே அரைசதம் அடித்தார். அவரும் 50 ரன்னுக்கே ஆட்டமிழந்தார். ஹசீப் ஹமீத், ஜாக் க்ராவ்லி, பென் ஸ்டோக்ஸ், பட்லர், பேர்ஸ்டோ என அனைவருமே ஏமாற்ற, 185 ரன்களுக்கே சுருண்டது இங்கிலாந்து அணி.

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய ஆஸ்திரேலிய அணியில் தொடக்க வீரர் மார்கஸ் ஹாரிஸ் மட்டுமே அரைசதம் அடித்தார். ஹாரிஸ் 76 ரன்கள் அடித்தார். மற்ற வீரர்கள் அரைசதம் அடிக்கவில்லை என்றாலும், மிக மோசமாக ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழக்காமல் பங்களிப்பு செய்தனர். வார்னர் (38), டிராவிஸ் ஹெட் (27), கேமரூன் க்ரீன் (17), அலெக்ஸ் கேரி (19), பாட் கம்மின்ஸ் (21), மிட்செல் ஸ்டார்க் (24) ஆகியோர் சிறு சிறு பங்களிப்பு செய்ய, முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 267 ரன்கள் அடித்தது.

82 ரன்கள் பின் தங்கிய நிலையில், 2ம் நாள் ஆட்டமான நேற்றைய ஆட்டத்தின் 3வது செசனில் 2வது இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணியின் பேட்ஸ்மேன்கள், மீண்டும் ஒருமுறை படுமோசமாக சொதப்பினர். ஜாக் க்ராவ்லி 5 ரன்னில் மிட்செல் ஸ்டார்க்கின் பந்தில் ஆட்டமிழக்க, ஹசீப் ஹமீத் 7 ரன்னில் போலந்தின் பந்தில் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் களத்திற்கு வந்த டேவிட் மலான் மற்றும் ஜாக் லீச் ஆகிய இருவருமே ரன்னே அடிக்காமல் டக் அவுட்டாகி வெளியேறினர். 

22 ரன்களுக்கே 4 விக்கெட்டுகளை இழந்த இங்கிலாந்து அணி, 2ம் நாள் ஆட்ட முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 31 ரன்கள் அடித்திருந்தது. ஜோ ரூட்டும் பென் ஸ்டோக்ஸும் களத்தில் இருந்தனர். 

51 ரன்கள் பின் தங்கிய நிலையில், 6 விக்கெட்டுகளை மட்டுமே கையில் வைத்திருந்த இங்கிலாந்து அணியின், ரூட்டும் ஸ்டோக்ஸும் 3ம் நாளான இன்றைய ஆட்டத்தை தொடர்ந்தனர். இன்றைய ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே 11 ரன்னுக்கு பென் ஸ்டோக்ஸ் ஆட்டமிழக்க, ஜானி பேர்ஸ்டோ மற்றும் ஜோஸ் பட்லர் ஆகிய 2 முக்கியமான வீரர்களும் தலா 5 ரன்னில் நடையை கட்ட, கேப்டன் ஜோ ரூட்டும் 28 ரன்னுக்கு ஆட்டமிழக்க, 2வது இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி வெறும் 68 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

இதையடுத்து இன்னிங்ஸ் மற்றும் 14 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி, 3-0 என ஆஷஸ் தொடரை வென்றது. கடைசி 2 போட்டிகள் இன்னும் எஞ்சியுள்ளன. இங்கிலாந்து அணி இந்த தொடரில் ஆடிய விதத்தை பார்க்கையில், கடைசி 2 போட்டிகளிலும் வெற்றி பெற வாய்ப்பே இல்லை. எனவே ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்தை ஒயிட்வாஷ் செய்ய முனையும்.