ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவருகிறது. தலா 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடர் நடந்துவருகிறது. முதலில் டி20 தொடர் நடந்தது. 3 போட்டிகளுமே சவுத்தாம்ப்டனில் தான் நடந்தன. முதல் 2 போட்டிகளிலுமே வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி 2-0 என தொடரை வென்றுவிட்ட நிலையில், கடைசி போட்டி நேற்று நடந்தது.

தொடரை வென்றுவிட்டதால், இங்கிலாந்து அணியில், முதல் 2 போட்டிகளில் ஆடாத சில வீரர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டது. கேப்டன் இயன் மோர்கன் மற்றும் ஜோஸ் பட்லர் ஆகிய இருவரும் விலகிக்கொண்டு, சாம் பில்லிங்ஸ் மற்றும் ஜோ டென்லி ஆகிய இருவருக்கும் வாய்ப்பளிக்கப்பட்டது. மொயின் அலி கேப்டனாக இருந்து இங்கிலாந்து அணியை வழிநடத்தினார். ஆஸ்திரேலிய அணியில் டேவிட் வார்னர், அலெக்ஸ் கேரி மற்றும் பாட் கம்மின்ஸ் ஆகிய மூவருக்கும் ஓய்வளிக்கப்பட்டு, மேத்யூ வேட், மிட்செல் மார்ஷ் மற்றும் ஜோஷ் ஹேசில்வுட் ஆகிய மூவரும் அணியில் சேர்க்கப்பட்டனர்.

இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்தை முதலில் பேட்டிங் செய்ய பணித்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணி 20 ஓவரில் 145 ரன்கள் மட்டுமே அடித்தது. ஃபார்மில் இல்லாமல் கடந்த சில போட்டிகளாக சொதப்பிவந்த ஜானி பேர்ஸ்டோ, இந்த போட்டியில் அரைசதம் அடித்தார். அவருடன் தொடக்க வீரராக இறங்கிய டாம் பாண்ட்டன் இந்த போட்டியிலும் சரியாக ஆடாமல் 2 ரன்னில் ஆட்டமிழந்தார். மாலன் 21 ரன்களும் மொயின் அலி 23 ரன்களும் ஜோ டென்லி 29 ரன்களும் அடிக்க, இங்கிலாந்து அணி 145 ரன்கள் அடித்தது.

146 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களாக மேத்யூ வேடும் கேப்டன் ஃபின்ச்சும் இறங்கினர். மேத்யூ வேட் தனக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளாமல் 14 ரன்களில் ஆட்டமிழக்க, 3ம் வரிசையில் களத்திற்கு வந்த மார்கஸ் ஸ்டோய்னிஸ் 26 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். கேப்டன் ஃபின்ச் இந்த போட்டியிலும் சிறப்பாக ஆடினார். ஆனால் கிடைத்த நல்ல தொடக்கத்தை பெரிய இன்னிங்ஸாக ஃபின்ச் மாற்றவில்லையென்றாலும், 26 பந்தில் 39 ரன்கள் அடித்தார். 

Also Read - ஐபிஎல் 2020: அதிக சம்பளம் வாங்கும் டாப் 10 வீரர்கள்.. தோனி, ரோஹித்தையே தூக்கியடித்த வெளிநாட்டு வீரர்

ஸ்மித் மற்றும் மேக்ஸ்வெல் ஆகிய இருவரும் ஒற்றை இலக்கத்தில் வெளியேற, ஆஸ்திரேலிய அணி 100 ரன்களுக்கே 5 விக்கெட்டுகளை இழந்துவிட்டது.  முதல் 2 போட்டிகளில் ஆட வாய்ப்பு கிடைக்காத மிட்செல் மார்ஷ், இந்த போட்டியில் தனக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி அருமையாக ஆடி 39 ரன்கள் அடித்து கடைசி வரை களத்தில் இருந்து ஆஸ்திரேலிய அணியை வெற்றி பெற செய்தார். அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்து ஆடிய அஷ்டன் அகர் கடைசி வரை களத்தில் இருந்து 16 ரன்கள் அடித்து உதவினார். 

இதையடுத்து 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி ஆறுதல் வெற்றி பெற்றது. முதல் 2 போட்டிகளில் தோற்று தொடரை இழந்த ஆஸ்திரேலிய அணி, கடைசி போட்டியில் ஆறுதல் வெற்றி பெற்று, ஒயிட்வாஷை தவிர்த்தது. இந்த போட்டியில் வென்றதன் மூலம், இங்கிலாந்தை ஐசிசி டி20 தரவரிசையில் முதலிடத்திற்கு முன்னேறுவதை தடுத்து, முதலிடத்தை தக்கவைத்துக்கொண்டுள்ளது ஆஸ்திரேலிய அணி. ஒருவேளை இந்த போட்டியில் ஆஸ்திரேலியா தோற்றிருந்தால், இங்கிலாந்தை முதலிடத்தை பிடித்திருக்கும். அதை ஆஸ்திரேலிய அணி தவிர்த்துவிட்டது. ஆஸ்திரேலிய அணி 275 புள்ளிகளுடன் முதலிடத்திலும் இங்கிலாந்து அணி 271 புள்ளிகளுடன் இரண்டாமிடத்திலும் உள்ளது.