Asianet News TamilAsianet News Tamil

டி20 உலக கோப்பை: ஆஸ்திரேலியாவிற்கு பயத்தை காட்டிய ரஷீத் கான்.. போராடி வென்ற ஆஸ்திரேலியா..!

டி20 உலக கோப்பையில் ஆஃப்கானிஸ்தானை 4 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. ஆஸ்திரேலிய அணி சூப்பர் 12 சுற்றில் அனைத்து போட்டிகளிலும் ஆடிவிட்டது. ஆனால் இன்னும் அரையிறுதிக்கு முன்னேறவில்லை. நாளை இங்கிலாந்து - இலங்கை போட்டி முடிவை பொறுத்தே ஆஸ்திரேலிய அணியின் தலையெழுத்து தீர்மானமாகும்.
 

australia beat afghanistan by 4 runs in t20 world cup
Author
First Published Nov 4, 2022, 5:21 PM IST

டி20 உலக கோப்பையில் க்ரூப் 1லிருந்து நியூசிலாந்து அணி அரையிறுதிக்கு முன்னேறிவிட்ட நிலையில், அந்த க்ரூப்பிலிருந்து 2வது அணியாக அரையிறுதிக்கு முன்னேற ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து இடையே போட்டி நிலவுகிறது. ஆஸ்திரேலிய அணி சூப்பர் 12 சுற்றின் கடைசி போட்டியில் இன்று ஆஃப்கானிஸ்தானை எதிர்கொண்டது. இங்கிலாந்து அணி நாளை இலங்கையை எதிர்கொள்கிறது.

எனவே வெற்றி கட்டாயத்துடன் ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ஆடிய ஆஸ்திரேலிய அணியில் கேப்டன் ஆரோன் ஃபின்ச் ஆடவில்லை. அதனால் மேத்யூ வேட் கேப்டன்சி செய்கிறார். அடிலெய்டில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஃப்கானிஸ்தான் அணி கேப்டன் முகமது நபி ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.

டி20 உலக கோப்பை: கேன் வில்லியம்சன் அபார பேட்டிங்.. அயர்லாந்தை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய நியூசிலாந்து

ஆஸ்திரேலிய அணியில் 3 மாற்றங்கள் செய்யப்பட்டன. ஃபின்ச், டிம் டேவிட் மற்றும் மிட்செல் ஸ்டார்க் ஆகியோருக்கு பதிலாக முறையே கேமரூன் க்ரீன், ஸ்டீவ் ஸ்மித் மற்றும் கேன் ரிச்சர்ட்ஸன் ஆகிய மூவரும் ஆடினர்.

ஆஸ்திரேலிய அணி:

டேவிட் வார்னர்,  கேமரூன் க்ரீன், மிட்செல் மார்ஷ், ஸ்டீவ் ஸ்மித், க்ளென் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோய்னிஸ், மேத்யூ வேட் (கேப்டன், விக்கெட் கீப்பர்), பாட் கம்மின்ஸ், கேன் ரிச்சர்ட்ஸன், ஆடம் ஸாம்பா, ஜோஷ் ஹேசில்வுட்.

ஆஃப்கானிஸ்தான் அணி:

ரஹ்மானுல்லா குர்பாஸ் (விக்கெட் கீப்பர்), உஸ்மான் கனி, இப்ராஹிம் ஜட்ரான், குல்பாதின் நைப், தன்விஷ் ரசூலி, நஜிபுல்லா ஜட்ரான், முகமது நபி (கேப்டன்), ரஷீத் கான், முஜீபுர் ரஹ்மான், நவீன் உல் ஹக், ஃபஸல்ஹக் ஃபரூக்கி.
 
முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் கேமரூன் க்ரீன் 3 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். முந்தைய போட்டிகளில் ஏமாற்றமளித்த வார்னர் இந்த போட்டியில் நல்ல ஷாட்களை அபாரமாக ஆடினார். ஆனால் தேவையில்லாத ஒரு ஷாட்டுக்கு முயன்று 25 ரன்னில் ஸ்டம்ப்பை பறிகொடுத்தார். ஸ்டீவ் ஸ்மித் 4 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ஆஃப்கான் பவுலிங்கை அடித்து ஆடிய மிட்செல் மார்ஷ் 30 பந்தில் 45 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். மார்கஸ் ஸ்டோய்னிஸும் 25 ரன்களுக்கு வெளியேறினார்.

டி20 உலக கோப்பையில் மேக்ஸ்வெல்லின் பேட்டிங்  ஃபார்ம் கவலையளித்த நிலையில், இன்றைய முக்கியமான போட்டியில் அபாரமாக பேட்டிங் ஆடிய க்ளென் மேக்ஸ்வெல் அரைசதம் அடித்தார். 32 பந்தில் 54 ரன்கள் அடித்தார் மேக்ஸ்வெல். டெத் ஓவர்களில் மேக்ஸ்வெல்லுக்கு மறுமுனையில் ஆதரவு கிடைக்காததால் 20 ஓவரில் 168 ரன்கள் மட்டுமே அடித்தது ஆஸ்திரேலிய அணி.

169 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய ஆஃப்கானிஸ்தான் அணியில் குல்பாதின் நைப் அதிகபட்சமாக 39 ரன்கள் அடித்தார்.  தொடக்க வீரர் ரஹ்மானுல்லா குர்பாஸ் 30 ரன்கள் அடித்தார். உஸ்மான் கனி(20, நஜிபுல்லா ஜட்ரான்(0), முகமது நபி(1) ஆகியோர் ஏமாற்றமளித்தனர். இப்ராஹிம் ஜட்ரான் 33 பந்தில் 26 ரன்கள் அடித்தார். பின்வரிசையில் ரஷீத் கான் ஆஸ்திரேலிய பவுலிங்கை அடித்து நொறுக்கினார். 23 பந்தில் 3 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 48 ரன்களை குவித்தார். கடைசி 3 பந்தில் ஆஃப்கான் வெற்றிக்கு 17 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், 4வது பந்தில் சிக்ஸரை விளாசி ஆஸ்திரேலியாவை பயமுறுத்தினார். ஆனால் 5வது பந்தில் ஷாட் சரியாக கனெக்ட் ஆகாததால் 2 ரன் மட்டுமே கிடைத்தது. கடைசி பந்தில் பவுண்டரி அடித்தார். எனவே 20 ஓவரில் 164 ரன்களை குவித்தது ஆஃப்கானிஸ்தான். 4 ரன் வித்தியாசத்தில் போராடி வெற்றி பெற்றது ஆஸ்திரேலியா.

IND vs ZIM: இந்தியாவை தோற்கடிங்க.. ஜிம்பாப்வே பையனை திருமணம் பண்ணிக்கிறேன்.. பாகிஸ்தான் நடிகை கொடுத்த ஆஃபர்

ஆஸ்திரேலிய அணி இந்த போட்டியில் வெற்றி பெற்று 7 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் 2ம் இடத்தில் இருந்தாலும், அரையிறுதிக்கு இன்னும் முன்னேறவில்லை. ஆஃப்கானிஸ்தானை 106 ரன்களுக்குள்ளாக சுருட்டி 62 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தால் இங்கிலாந்தை விட அதிக நெட் ரன்ரேட்டை பெற்றிருக்கலாம். ஆனால் இப்போது 7 புள்ளிகளை பெற்றாலும், இங்கிலாந்தை விட நெட்ரன்ரேட் குறைவுதான். நாளை இங்கிலாந்து - இலங்கை இடையேயான போட்டியில் இலங்கை ஜெயித்தால் தான் ஆஸ்திரேலிய அணி அரையிறுதிக்கு முன்னேற முடியும். இங்கிலாந்து ஜெயித்தால் நேரடியாக அரையிறுதிக்கு முன்னேறிவிடும். ஆஸ்திரேலியா தொடரைவிட்டு வெளியேறிவிடும்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios