ஆஷஸ் தொடரின் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்துவருகிறது. கடந்த 12ம் தேதி தொடங்கிய இந்த போட்டியில், முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணி, பட்லரின் அதிரடியான அரைசதம் மற்றும் ஜோ ரூட்டின் பொறுப்பான அரைசதம் ஆகியவற்றின் விளைவாக முதல் இன்னிங்ஸில் 294 ரன்களை அடித்தது.

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்கள் வார்னர் மற்றும் மார்கஸ் ஹாரிஸ் ஆகிய இருவருமே ஒற்றை இலக்கத்தில் வெளியேற, வழக்கம்போலவே ஸ்மித்தும் லபுஷேனும் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்து ரன்களை சேர்த்தனர். லபுஷேன் 48 ரன்களில் ஆட்டமிழக்க, அதன்பின்னர் மிட்செல் மார்ஷ், மேத்யூ வேட், டிம் பெய்ன், பாட் கம்மின்ஸ் என வரிசையாக ஆஸ்திரேலிய அணி விக்கெட்டுகளை இழந்தது. 

ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் வழக்கம்போலவே நங்கூரமிட்டு ரன்களை குவித்துக்கொண்டிருந்த ஸ்மித், 80 ரன்களில் கிறிஸ் வோக்ஸின் பந்தில் ஆட்டமிழந்தார். இதையடுத்து ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 225 ரன்களுக்கே ஆல் அவுட்டானது. இங்கிலாந்து அணியின் சார்பில் ஆர்ச்சர் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். 

69 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணி, இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் விக்கெட் இழப்பின்றி 9 ரன்கள் அடித்துள்ளது. இரண்டு நாள் ஆட்டம் தான் முடிந்துள்ள நிலையில், இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸை ஆட தொடங்கிவிட்டது. அதுவும் 78 ரன்கள் முன்னிலையும் பெற்றுள்ளது. இந்த நல்ல வாய்ப்பை பயன்படுத்தி ஆஸ்திரேலிய அணியை இங்கிலாந்து வீழ்த்துமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். இந்த போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தினால்தான் இங்கிலாந்து அணியால் தொடரை சமன்செய்ய முடியும். இல்லையெனில் 3-1 என தொடரை இழக்க நேரிடும். இரண்டாவது நாள் முடிவிலேயே இரண்டாவது இன்னிங்ஸ் தொடங்கப்பட்டுவிட்டதால், இந்த போட்டி டிராவில் முடிய வாய்ப்பில்லை.