அஷ்வின் வித்தியாசமான பவுலிங் ஆக்‌ஷனை பரிசோதனை செய்வதற்கான தளமாக தமிழ்நாடு பிரீமியர் லீக்கை பயன்படுத்தி கொண்டிருக்கிறார். 

தோனி தலைமையிலான இந்திய அணியில் நட்சத்திர பவுலராகவும் தோனியின் ஆஸ்தான பவுலராகவும் திகழ்ந்த அஷ்வின், கோலி கேப்டனான பிறகு ஒருநாள் அணியிலிருந்து களையெடுக்கப்பட்டார். ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓரங்கட்டப்பட்டு டெஸ்ட் போட்டிகளில் மட்டும் ஆடிவருகிறார். 

வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான டெஸ்ட் அணியில் இடம்பெற்றிருக்கும் அஷ்வின், தற்போது தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டுவருகிறார். தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் முதல் போட்டியில் சேப்பாக் கில்லீஸ் அணிக்கு எதிராக கையை முழுவதுமாக சுழற்றாமல் பேட்ஸ்மேனை ஏமாற்றும் விதமாக ஒரு பந்தை போட்டார். 

இந்நிலையில், மதுரை பாந்தர்ஸ் அணிக்கு எதிராகவும் அப்படியான ஒரு பந்தை போட்டு விக்கெட்டையும் எடுத்துள்ளார். மதுரை பாந்தர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய திண்டுக்கல் டிராகன்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் ஜெகதீஷன் 87 ரன்களையும் நிஷாந்த் 57 ரன்களையும் குவிக்க, அந்த அணி 20 ஓவர் முடிவில் 182 ரன்களை குவித்தது. 183 ரன்கள் என்ற இலக்குடன் இறங்கிய மதுரை பாந்தர்ஸ் அணியை 152 ரன்களுக்கு சுருட்டி 30 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது திண்டுக்கல் டிராகன்ஸ் அணி. 

இந்த போட்டியில் அஷ்வின் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 9வது விக்கெட்டாக கிரன் ஆகாஷை வீழ்த்தினார் அஷ்வின். 20வது ஓவரின் அந்த பந்தை மறைத்தே கொண்டுவந்த அஷ்வின், பேட்ஸ்மேன் கணிக்கமுடியாத வகையில், கையை சுழற்றாமலேயே தூக்கி போட்டார். அந்த பந்தை தூக்கியடித்து ஆகாஷ் ஆட்டமிழந்தார். அந்த வீடியோ இதோ..

My experiments with the ball - Ft. Ravi... - Tamil Nadu Premier League

My experiments with the ball - Ft. Ravi Ashwin! What would you name this delivery?!#TNPL2019 #NammaPasangaNammaGethu

இதேபோன்ற பந்துகளை சர்வதேச போட்டிகளில் வீசினால், பேட்ஸ்மேன்கள் தூக்கி அடித்து மைதானத்துக்கு வெளியே அனுப்பிவிடுவார்கள். அதனால் தனது திறமையை காட்டும்விதமாக தமிழ்நாடு பிரீமியர் லீக்கில், அதுவும் 9ம் வரிசை பேட்ஸ்மேனுக்கு இப்படி வீசியுள்ளார் அஷ்வின். பரிசோதனையை பச்ச புள்ளையை வைத்து செய்துள்ளார்.