வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 318 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதையடுத்து இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை தொடங்கவுள்ளது. 

இந்த போட்டிக்கான அணி தேர்வு கடும் சர்ச்சைக்குள்ளானது. டெஸ்ட் அணியில் ரோஹித் சர்மா எடுக்கப்பட்டும் கூட, ஆடும் லெவனில் அவரை சேர்க்காதது முன்னாள் ஜாம்பவன்களையே கடுப்படைய செய்தது. அதேபோல வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட்டில் அபாரமான ரெக்கார்டை வைத்திருக்கும் அஷ்வினின் புறக்கணிப்பும் அதிர்ச்சிகரமானதுதான். 

முதல் டெஸ்ட் போட்டியில் வர்ணனை செய்துகொண்டிருந்த கவாஸ்கர், அஷ்வினின் புறக்கணிப்பு தனக்கு அதிர்ச்சியளித்ததாக தெரிவித்திருந்தார். வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக நல்ல ரெக்கார்டு வைத்திருக்கும் அஷ்வினுக்கு ஆடும் லெவனில் இடமில்லை. எனக்கு அதிர்ச்சியாக இருக்கிறது என்று கவாஸ்கர் தெரிவித்திருந்தார். 

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக 11 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 60 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள அஷ்வின், பவுலிங்கில் மட்டுமல்லாமல் பேட்டிங்கிலும் அந்த அணிக்கு எதிராக அசத்தியுள்ளார். டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக 4 சதங்களை விளாசியுள்ளார் என்பதும் கடந்த முறை இந்திய அணி வெஸ்ட் இண்டீஸிற்கு சுற்றுப்பயணம் சென்றபோது, அஷ்வின் தான் தொடர் நாயகன் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில், அடுத்த போட்டியிலாவது அஷ்வின் சேர்க்கப்படுவாரா என்பது பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது. அஷ்வின் அடுத்து ஆடும் போட்டியில் 8 விக்கெட்டுகள் எடுத்தால், விரைவில் 350 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய பவுலர் என்ற பெருமையை முத்தையா முரளிதரனுடன் பகிர்ந்துகொள்வார். அஷ்வின் அடுத்து ஆடும் போட்டி அவருக்கு 66வது டெஸ்ட் போட்டி. முத்தையா முரளிதரன், தனது 66வது போட்டியில்தான் 350 விக்கெட்டுகள் என்ற மைல்கல்லை எட்டினார்.

எனவே அடுத்த போட்டியில் அஷ்வின் 8 விக்கெட்டுகளை வீழ்த்தினால் முரளிதரனின் சாதனையை சமன் செய்வார். வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக நல்ல ரெக்கார்டை வைத்திருக்கும் அஷ்வினுக்கு, இந்த சாதனையை படைக்க, வெஸ்ட் இண்டீஸ் அணிதான் ஏற்றது. ஏனெனில் கண்டிப்பாக இரண்டு இன்னிங்ஸ்களில் அஷ்வின் 8 விக்கெட்டுகளை வீழ்த்திவிடுவார். 

அஷ்வின் இந்த சாதனையை படைக்க, அவரை அடுத்த போட்டிக்கான அணியில் சேர்த்து வழிவகை செய்கிறாரா என்று பார்ப்போம்.