ஆஸ்திரேலியாவில் உள்நாட்டு ஒருநாள் தொடர் நடந்துவருகிறது. இதில் சௌத் ஆஸ்திரேலியா மற்றும் வெஸ்டர்ன் ஆஸ்திரேலியா ஆகிய அணிகளுக்கு இடையே நடந்த போட்டியில், வெஸ்டர்ன் ஆஸ்திரேலியா 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

முதலில் பேட்டிங் ஆடிய வெஸ்டர்ன் ஆஸ்திரேலியா 49.1 ஓவரில் 252 ரன்கள் அடித்து ஆல் அவுட்டானது. 253 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய சௌத் ஆஸ்திரேலியா 246 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதையடுத்து 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது வெஸ்டர்ன் ஆஸ்திரேலியா அணி. 

இந்த போட்டியில் வெஸ்டர்ன் ஆஸ்திரேலியா அணியில் அஷ்டன் அகரும், சௌத் ஆஸ்திரேலியா அணியில் அவரது தம்பி வெஸ் அகரும் ஆடினர். சௌத் ஆஸ்திரேலியா பேட்டிங்கின்போது தம்பி வெஸ் அகர் அடித்த பந்து, மிட் ஆன் திசையில் ஃபீல்டிங் செய்த அஷ்டன் அகரிடம் சென்றது. அதை நின்றுகொண்டே அஷ்டன் அகர் பிடித்திருக்கலாம். ஆனால் பந்தை தவறாக கணித்ததால் சற்று கீழே தனிந்தவாறு அந்த பந்தை பிடிக்க முயன்றார். ஆனால் அவர் பந்த பிடிக்காமல் விட்டுவிட, பந்து அவரது நெற்றிப்பொட்டில் அடித்தது. 

இதனால் பலத்த காயமடைந்த அஷ்டன் அகர் அப்படியே மைதானத்தில் குப்புற விழுந்துவிட்டார். அவர் சிறிது நேரம் திரும்பவேயில்லை. பின்னர் சக வீரர்கள் அனைவரும் அவரது அருகில் வந்து திருப்பினர். அஷ்டன் அகர் திரும்பியதும்தான் அதிர்ச்சி காத்திருந்தது. பந்து நெற்றிப்பொட்டில் அடித்ததால், ரத்தம் பொளபொளவென கொட்டியது. உடனடியாக ஃபிசியோ வந்து அஷ்டன் அகர் மைதானத்திலிருந்து அழைத்து செல்லப்பட்டார். அவருக்கு அடிபட்டு ரத்தம் கொட்டிய வீடியோவை பார்ப்பவர்களையே பதறவைக்கும் அளவிற்கு உள்ளது.