பாகிஸ்தான் சுற்றுப்பயணத்திற்கான ஆஸ்திரேலிய அணியில் இடம்பெற்றுள்ள அஷ்டான் அகருக்கு மர்ம நபர் ஒருவர் கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆஸ்திரேலிய அணி நீண்ட காலத்திற்கு பிறகு பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் சென்று கிரிக்கெட் தொடரில் ஆடுகிறது. 2019ம் ஆண்டு ஆஷஸ் டெஸ்ட் தொடருக்கு பிறகு இந்த பாகிஸ்தான் சுற்றுப்பயணம் தான் ஆஸ்திரேலிய அணியின் முதல் வெளிநாட்டு சுற்றுப்பயணம்.
பாகிஸ்தானுக்கு சென்றுள்ள ஆஸ்திரேலிய அணி, 3 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் ஒரு டி20 போட்டி கொண்ட தொடரில் ஆடுகிறது. டெஸ்ட் தொடர் வரும் 4ம் தேதி தொடங்குகிறது.
பாகிஸ்தான் சுற்றுப்பயணத்துக்கான 3 விதமான போட்டிகளுக்குமான ஆஸ்திரேலிய அணியில் இடம்பெற்றுள்ள அஷ்டான் அகர் என்ற வீரரின் மனைவியிடம், உங்கள் கணவர் பாகிஸ்தானுக்கு சென்றால் உயிருடன் திரும்பமாட்டார் என்று அஷ்டான் அகருக்கு இன்ஸ்டாகிரமில் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
தனது கணவருக்கு விடுக்கப்பட்ட கொலை மிரட்டலை கண்டு பயந்துபோன அஷ்டான் அகர் மனைவி, ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திடம் புகார் அளித்தார். இருநாட்டு கிரிக்கெட் வாரியமும் விசாரணை நடத்தியதில், பொய்யான இன்ஸ்டாகிராம் அக்கவுண்டிலிருந்து ஒருவர் மிரட்டல் விடுத்திருப்பது தெரியவந்தது. அதனால் எந்த பாதிப்பும் இல்லை; பயப்பட வேண்டிய அவசியமில்லை என்று தெரியவந்தது.
ஏற்கனவே நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகள் கடந்த ஆண்டில் பாதுகாப்பு அச்சுறுத்தல்களை காரணம் காட்டி பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தை ரத்து செய்தன என்பது குறிப்பிடத்தக்கது.
