தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் கேப்டன் ரிஷப் பண்ட்டுக்கு டக் அவுட்டிலிருந்து பயிற்சியாளர் ராகுல் டிராவிட், ஒரு முக்கியமான மெசேஜை தெரியப்படுத்த தவறிவிட்டார் என்று ஆஷிஷ் நெஹ்ரா கருத்து கூறியுள்ளார்.
இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான முதல் டி20 போட்டி டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் நேற்று நடந்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 211 ரன்களை குவித்தும், அதை கட்டுப்படுத்த முடியாமல் 7 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.
முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணியின் தொடக்க வீரர் இஷான் கிஷன் அதிரடியாக ஆடி அரைசதம் அடித்தார். அதிகபட்சமாக அவர் 48 பந்தில் 76 ரன்களை குவித்தார். ஷ்ரேயாஸ் ஐயர் 27 பந்தில் 36 ரன்கள் அடித்தார். டெத் ஓவரில் அடித்து ஆடிய ஹர்திக் பாண்டியா 12 பந்தில் 31 ரன்கள் அடித்து சிறப்பாக முடித்து கொடுத்தார். இதையடுத்து 20 ஓவரில் 211 ரன்கள் அடித்தது இந்திய அணி.
212 ரன்கள் என்பது கடினமான இலக்குதான் என்றாலும், டேவிட் மில்லர்(64) மற்றும் வாண்டர் டசன்(75) ஆகிய இருவரின் அதிரடி அரைசதங்களால் கடைசி ஓவரின் முதல் பந்திலேயே இலக்கை அடித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக அபார வெற்றி பெற்றது தென்னாப்பிரிக்கா.
இந்த போட்டியில் ரிஷப் பண்ட்டின் கேப்டன்சி மிக சுமாராகவே இருந்தது. இந்திய அணியின் முன்னணி மற்றும் நட்சத்திர ஸ்பின்னரான யுஸ்வேந்திர சாஹலுக்கு வெறும் 2ஓவர்கள் மட்டுமே பவுலிங் கொடுத்திருந்தார் ரிஷப்பண்ட். சாஹலின் பவுலிங்கை அவர்கள் அடித்து ஆடியதால் மேலும் ஒரு ஓவர் வழங்க தயங்கினார் ரிஷப் பண்ட். ஆனால் சாஹல் மாதிரியான பவுலர்கள் ஆட்டத்தை திருப்பவல்லவர்கள். டேவிட் மில்லரும் வாண்டர் டசனும் பார்ட்னர்ஷிப் அமைத்து அடித்து ஆடிக்கொண்டிருந்தபோது அந்த ஜோடியை பிரிக்க சாஹலை பயன்படுத்தியிருக்க வேண்டும் ஆனால் அதை செய்ய தவறிவிட்டார் ரிஷப் பண்ட்.
ரிஷப் பண்ட் அனுபவமில்லாத கேப்டன். எனவே தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தான் அந்த மெசேஜை ரிஷப்புக்கு அனுப்பியிருக்க வேண்டும் என்று ஆஷிஷ் நெஹ்ரா கருத்து கூறியுள்ளார்.
அண்மையில் ஐபிஎல் டைட்டிலை அடித்த குஜராத் டைட்டன்ஸ் அணியின் பயிற்சியாளராக செயல்பட்ட ஆஷிஷ் நெஹ்ரா, இதுகுறித்து பேசும்போது, ரிஷப் பண்ட் இளம் கேப்டன். அவர் இப்போதுதான் கற்றுக்கொண்டிருக்கிறார். சாஹலுக்கு இன்னும் ஒரு ஓவர் கொடுத்திருக்கலாம் என டிராவிட் நினைத்திருந்தால், கண்டிப்பாக, ரிஷப்புக்கு அந்த தகவலை தெரியப்படுத்தியிருக்க வேண்டும். சாஹல் மாதிரியான பவுலர் வெறும் 2 ஓவர் மட்டுமே வீசியது எனக்கு பெரும் வியப்பாக இருந்தது. டேவிட் மில்லரும் வாண்டர் டசனும் ஆடியபோது சாஹலுக்கு பவுலிங் கொடுத்திருக்க வேண்டும். ரிஷப் பண்ட் அந்த இடத்தில் கண்டிப்பாகவே தவறிழைத்துவிட்டார் என்று ஆஷிஷ் நெஹ்ரா கருத்து கூறியுள்ளார்.
