மும்பை இந்தியன்ஸ் அணி ஐபிஎல் 15வது சீசனில் தொடர் தோல்விகளை சந்தித்துவரும் நிலையில், வலைப்பயிற்சியில் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் அபாரமாக பந்துவீசிவரும் நிலையில், துல்லியமான யார்க்கரில் ஸ்டம்ப்பை கழட்டி எறியும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.
ஐபிஎல் 15வது சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணி படுமோசமாக ஆடிவருகிறது. 5 முறை சாம்பியனான ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி, இந்த சீசனில் இதுவரை ஆடிய 6 போட்டிகளிலும் தோல்வி அடைந்து புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.
மும்பை அணியின் நட்சத்திர வீரர்களான ரோஹித் சர்மா, பொல்லார்டு ஆகியோர் சோபிக்கவில்லை. பவுலிங்கும் படுமோசமாக உள்ளது. பும்ராவைத்தவிர வேறு யாருமே சரியாக பந்துவீசுவதில்லை. எனவே தான் தொடர் தோல்விகளை தழுவிவருகிறது மும்பை அணி.
இந்நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம்பெற்றுள்ள சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் வலைப்பயிற்சியில் அருமையாக பந்துவீசிவருகிறார். ஃபாஸ்ட் பவுலிங் ஆல்ரவுண்டரான அர்ஜுன் டெண்டுல்கர், வலையில் அருமையாக பந்துவீசுவதால் அவரை மும்பை அணி ஆடவைக்க வேண்டும் என்ற வலியுறுத்தல்கள் வலுத்துள்ளன.
இந்நிலையில், வலைப்பயிற்சியில் பந்துவீசிய அர்ஜுன் டெண்டுல்கர், துல்லியமான யார்க்கர் வீசி ஸ்டம்ப்பை கழட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. இடது கை ஃபாஸ்ட் பவுலரான அர்ஜுன் டெண்டுல்கர் மும்பை அணியில் ஆடினால் கண்டிப்பாக அணி பேலன்ஸை வலுப்படுத்துவதுடன், பவுலிங் யூனிட்டுக்கும் வலுசேர்ப்பார். எனவே அவரை மும்பை அணி ஆடவைக்க வேண்டிய தருணம் வந்துவிட்டதாகவே பார்க்கப்படுகிறது.
