உணர்ச்சிவசத்தில் கண்ணீர்விட்டு அழுத இந்திய வீரர்கள் – வாமிகாவின் கவலையை பகிர்ந்த அனுஷ்கா சர்மா!
தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான இறுதிப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து இந்திய அணி வீரர்கள் உணர்ச்சிவசத்தில் கண்ணீர்விட்டு அழுத நிலையில், வாமிகா கவலையை அடைந்ததாக அனுஷ்கா சர்மா கூறியுள்ளார்.
இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா இடையிலான டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டி 29ஆம் தேதி நடைபெற்றது. இதில், முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 176 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக விராட் கோலி 76 ரன்கள் குவித்தார். பின்னர் கடின இலக்கை துரத்திய தென் ஆப்பிரிக்கா அணியானது 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 169 ரன்கள் மட்டுமே எடுத்து 7 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
இதன் மூலமாக இந்திய அணியானது 17 ஆண்டுகளுக்கு பிறகு 2ஆவது முறையாக டிராபியை கைப்பற்றியது. 11 ஆண்டுகளுக்கு இறுதிப் போட்டிக்கு வந்த இந்திய அணியானது டிராபியை வென்றது. டிராபி வென்ற மகிழ்ச்சியில் இந்திய அணி வீரர்கள் உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர்விட்டு அழுதனர். இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானது.
இந்த நிலையில் தான், விராட் கோலியின் மகள் இந்திய அணி வீரர்கள் குறித்து கவலை அடைந்ததாக அனுஷ்கா சர்மா தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: எங்களது மகள் வாமிகாவின் மிகப்பெரிய கவலை என்னவென்றால் எல்லா வீரர்களும் டிவியில் அழுவதைப் பார்த்த பிறகு அவர்களைக் கட்டிப்பிடிக்க யாராவது இருக்கிறார்களா…. ஆம், என் அன்பே, அவர்கள் 1.5 பில்லியன் மக்களால் கட்டிப்பிடிக்கப்பட்டார்கள். அற்புதமான வெற்றி. சாம்பியன்ஸ் வாழ்த்துக்கள் என்று அனுஷ்கா சர்மா பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.