இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் சீனியர் வீராங்கனை அதிவேக மிரட்டல் ஃபாஸ்ட் பவுலர் ஜுலான் கோஸ்வாமியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்கும் அனுஷ்கா சர்மா வெளியிட்ட வீடியோ இன்ஸ்டாகிராமில் செம வைரலாகிவருகிறது.
விராட் கோலி - அனுஷ்கா சர்மா:
சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரர்களில் ஒருவரும் இந்திய அணியின் முன்னாள் கேப்டனுமான விராட் கோலியின் மனைவி பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா. விராட் கோலியும் அனுஷ்கா சர்மாவும் கடந்த 2017ம் ஆண்டு டிசம்பர் மாதம் திருமணம் செய்துகொண்டனர்.
அனுஷ்கா சர்மா வீடியோ:
33 வயதான அனுஷ்கா சர்மா, இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் சீனியர் வீராங்கனை ஜுலான் கோஸ்வாமியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்கிறார். ”சக்தா எக்ஸ்பிரஸ்” என்ற அந்த படத்திற்காக அவர் தயாராகிவரும் வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அதை பார்த்தால் விராட் கோலியையே தூக்கி சாப்பிட்டுவிடுவாரோ எனுமளவிற்கு மிரட்டலாக உள்ளது.
ஃபாஸ்ட் பவுலரான ஜுலான் கோஸ்வாமியின் கேரக்டரில் நடிப்பதால், ஃபாஸ்ட் பவுலிங் வீசும் காட்சிகளும், பேட்டிங் ஆடும் காட்சிகளும் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளன. அந்த வீடியோ செம வைரலாகிவருகிறது.
ஜுலான் கோஸ்வாமி:
39 வயதான ஜுலான் கோஸ்வாமி 2002ம் ஆண்டிலிருந்து 20 ஆண்டுகளாக இந்திய அணியில் ஆடிவருகிறார். 12 டெஸ்ட், 195 ஒருநாள் மற்றும் 68 டி20 போட்டிகளில் ஆடியுள்ள ஜுலான் கோஸ்வாமி முறையே, 44, 245 மற்றும் 56 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
நியூசிலாந்தில் நடந்துவரும் ஐசிசி மகளிர் உலக கோப்பை தொடரில் இந்திய அணிக்காக ஆடிவரும் ஜுலான், ஐசிசி உலக கோப்பையில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீராங்கனை என்ற சாதனையை படைத்தார். மேற்குவங்க மாநிலம் சக்தா என்ற ஊரை சேர்ந்தவர் ஜூலான் என்பதால், சக்தா எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் தயாராகும் அவரது வாழ்க்கை வரலாற்று படத்தில் தான் அனுஷ்கா சர்மா நடிக்கிறார்.
