டி20 உலக கோப்பை: இந்திய பேட்ஸ்மேன்களை எச்சரிக்கும் தென்னாப்பிரிக்க ஃபாஸ்ட் பவுலர் அன்ரிக் நோர்க்யா
டி20 உலக கோப்பையில் இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான போட்டிக்கு முன், இந்திய வீரர்களை எச்சரித்துள்ளார் தென்னாப்பிரிக்க ஃபாஸ்ட் பவுலர் அன்ரிக் நோர்க்யா.
டி20 உலக கோப்பையில் க்ரூப் 2ல் வலுவான மற்றும் புள்ளி பட்டியலில் ஆதிக்கம் செலுத்தும் 2 அணிகளான இந்தியாவும் தென்னாப்பிரிக்காவும் நாளை(அக்டோபர் 30) பெர்த்தில் மோதுகின்றன.
இரு அணிகளும் சமபலம் வாய்ந்த அணிகள் என்பதால் இந்த போட்டி மிகக்கடுமையாக இருக்கும். இந்திய அணியை பொறுத்தமட்டில் ரோஹித், கோலி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா ஆகியோர் நல்ல ஃபார்மில் சிறப்பாக பேட்டிங் ஆடிவருகின்றனர். ராகுல் மட்டுமே கவலையளிக்கிறார். இந்திய அணி முந்தைய 2 போட்டிகளிலும் டெத் பவுலிங் சிறப்பாக வீசியிருந்தாலும், அது இன்னும் கவலையாகவே உள்ளது. ஆனால் புவனேஷ்வர் குமார், ஷமி, அர்ஷ்தீப் சிங் ஆகிய மூவரும் அருமையாக பந்துவீசிவருகின்றனர்.
டி20 உலக கோப்பை: தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக களமிறங்கும் இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவன்
தென்னாப்பிரிக்க அணியை பொறுத்தமட்டில் பேட்டிங்கில் குயிண்டன் டி காக், ரைலீ ரூசோ, டேவிட் மில்லர் ஆகியோர் டாப் ஃபார்மில் உள்ளனர். டி காக் அபாரமாக ஆடிவருகிறார். ரைலீ ரூசோ வங்கதேசத்துக்கு எதிராக அருமையான சதமடித்திருக்கிறார். டேவிட் மில்லர், மார்க்ரம் ஆகியோரும் நல்ல ஃபார்மில் உள்ளனர்.
ஃபாஸ்ட் பவுலிங்கை பொறுத்தமட்டில் நோர்க்யா 150 கிமீ வேகத்திற்கு மேல் வீசி மிரட்டுகிறார். ரபாடா, இங்கிடி, வைன் பார்னெல் ஆகியோரும் அபாரமாக பந்துவீசுகின்றனர். ஸ்பின்னர்கள் ஷம்ஸி மற்றும் கேஷவ் மஹராஜ் ஆகிய இருவரும் மிக அபாரமாக பந்துவீசி அசத்திவருகின்றனர். எனவே இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான போட்டி மிகக்கடுமையாக இருக்கும்.
தென்னாப்பிரிக்க அணியில் நோர்க்யா, ரபாடா ஆகியோர் 145 கிமீ வேகத்திற்கு மேல் வீசக்கூடியவர்கள் என்பதால் இந்திய பேட்ஸ்மேன்கள் அவர்களை எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பது பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய வீரர்கள் தென்னாப்பிரிக்க ஃபாஸ்ட் பவுலிங்கை எதிர்கொள்வது பெரும் சவாலாக இருக்கும் என்று லான்ஸ் க்ளூசனர் கருத்து கூறியிருந்தார்.
இந்நிலையில், நாளை போட்டி நடக்கவுள்ள நிலையில், அதற்கு முன் பேசிய தென்னாப்பிரிக்க ஃபாஸ்ட் பவுலர் அன்ரிக் நோர்க்யா, இந்த உலக கோப்பையில் சிறந்த ஃபாஸ்ட் பவுலிங் யூனிட் நாங்கள் என்று உறுதியாக நம்புகிறேன். எங்களிடம் நல்ல வெரைட்டியும் இருக்கிறது. வலுவான அட்டாக்காக திகழ்கிறோம். ஒரு ஃபாஸ்ட் பவுலிங் யூனிட்டாக நாங்கள் எந்த அணிக்கு எதிராகவும் சிறப்பாக ஆடுவோம் என்ற நம்பிக்கையுடனும் உறுதியுடனும் ஆடுகிறோம். 2 அருமையான இளம் ஸ்பின்னர்களும் இருக்கிறார்கள். எனவே இந்தியாவிற்கு எதிரான நாளைய போட்டியை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளோம் என்று நோர்க்யா தெரிவித்தார்.