WTC பைனலில் தன்னை வேண்டுமென்றே சேர்க்கவில்லை என்று தென்னாப்பிரிக்கா தேர்வுக்குழுவை அன்ரிச் நார்ட்ஜே விமர்சித்துள்ளார். இது குறித்த முழு விவரத்தை பார்ப்போம்.

Anrich Nordtje criticises South Africa Cricket Board: ஜூன் 11ம் தேதி தொடங்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஸ்ஷிப் இறுதிபோட்டியில் ஆஸ்திரேலியாவும், தென்னாப்பிரிக்காவும் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதுவரை எந்த உலககோப்பையையும் கையில் ஏந்தாத தென்னாப்பிரிக்கா அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஸ்ஷிப் பைனலில் வெற்றிவாகை சூடுமா என ரசிகர்கள் எதிர்ப்பார்த்து இருக்கின்றனர். இந்நிலையில், அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளார் அன்ரிச் நார்ட்ஜே உலக டெஸ்ட் சாம்பியன்ஸ்ஷிப் அணியில் தன்னை சேர்க்காததற்கு தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் வாரியத்தை கடுமையாக சாடியுள்ளார்.

தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் வாரியத்தை சாடிய அன்ரிச் நார்ட்ஜே

இது தொடர்பாக ஸ்போர்ட்ஸ்பூமில் பேசிய அன்ரிச் நார்ட்ஜே, ''கடந்த ஆண்டு, உலகக் கோப்பைக்கு முன்பிருந்து டிசம்பர் வரை நான் தயாராக இருந்தேன். டிசம்பரில் மட்டுமே மீண்டும் விளையாடத் தேர்ந்தெடுக்கப்பட்டேன். மற்றவர்களுக்கு வாய்ப்புகளை வழங்குவதற்காக பெரும்பாலான தொடர்களில் என்னை அணியில் சேர்க்கவில்லை. நான் நாட்டிற்காக விளையாட காத்திருக்கிறேன். ஆனால் அணியின் தேர்வுக் குழுவினர் என்னை தேர்வு செய்யவில்ல'' என்றார்.

தென்னாப்பிரிக்காவுடன் ஒப்பந்தம் ரத்து

கடந்த ஆண்டு, அன்ரிச் நார்ட்ஜே கிரிக்கெட் தென்னாப்பிரிக்காவுடனான மத்திய ஒப்பந்தத்தை மறுத்துவிட்டார். இது தொடர்பாக பேசிய அவர், ''இது என்னுடைய முடிவு. என் உடல் எப்படிப் போகிறது என்பதைப் பார்ப்பதற்காகத்தான் இந்த முடிவு. ஒவ்வொரு தொடரையும் அல்லது வரவிருக்கும் அனைத்தையும் விளையாடுவதை விட, என்னால் முடிந்தவரை விளையாட நான் தயாராக இருக்கிறேன் என்று எனக்குத் தெரிந்தவுடன் விளையாட நேரம் ஒதுக்க விரும்பினேன். எனவே, என் உடலுக்கு ஏற்ப அந்த முடிவை நானே எடுப்பது இதுவரை நன்றாக உள்ளது. இன்னும் இந்த முடிவில் மகிழ்ச்சியடைகிறேன்'' என்று தெரிவித்தார்.

டி20 உலகக் கோப்பையில் அசத்திய அன்ரிச் நார்ட்ஜே

தென்னாப்பிரிக்கா அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான அன்ரிச் நார்ட்ஜே, கடந்த ஆண்டு டி20 உலகக் கோப்பையில் பவுலிங்கில் அசத்தினார். 5.74 எகானமியில் 15 விக்கெட்டுகளை வீழ்த்தி, இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவுடன் இணைந்து இரண்டாவது அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரராக திகழ்ந்தார். ஆனால் அதற்கு பாகிஸ்தானுக்கு எதிரான உள்நாட்டு தொடரில் அணியில் இடம்கிடைத்தப்போதும் பிளேயிங் லெவனில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் விளையாடும் அன்ரிச் நார்ட்ஜே

அதனைத் தொடர்ந்து தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் வாரியம் அவரை ஓரம்கட்ட ஆரம்பித்தது. இப்போது உலக டெஸ்ட் சாம்பியன்ஸ்ஷிப் இறுதிபோட்டியிலும் அவர் சேர்க்கப்படவில்லை. அன்ரிச் நார்ட்ஜே நடப்பு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். ஆனால் ஒரே ஒரு போட்டியில் மட்டுமே அவருக்கு பிளேயிங் லெவனில் ஆட வாய்ப்பு கிடைத்தது குறிப்பிடத்தக்கது.