ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பைக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கியது, 4ம் வரிசை பேட்ஸ்மேனுக்கான தேடுதல் படலம். ஆனாலும் தேர்வுக்குழு மற்றும் அணி நிர்வாகத்தால் உலக கோப்பைக்கு முன்பே சரியான வீரரை கண்டறிய முடியவில்லை. 4ம் வரிசையில் ஆட தகுதியான வீரர்கள் இருந்தனர். அவர்களை கண்டுபிடிக்க தேர்வுக்குழுவாலும் அணி நிர்வாகத்தாலும் முடியவில்லை. 

மனீஷ் பாண்டே, ஷ்ரேயாஸ் ஐயர், அம்பாதி ராயுடு உள்ளிட்ட பல வீரர்களை அந்த வரிசையில் இறக்கி பரிசோதித்த அணி நிர்வாகம், கடைசியில் உலக கோப்பையில் இவர்கள் யாரையுமே எடுக்காமல் விஜய் சங்கரை அணியில் எடுத்தது. உலக கோப்பையில் மிடில் ஆர்டர்கள் சொதப்பியதால் அரையிறுதியில் தோல்வியை தழுவி வெளியேறிய இந்திய அணி, உலக கோப்பைக்கு பின்னர் நான்காம் வரிசை வீரரை கண்டறிந்தது. 

ஷ்ரேயாஸ் ஐயர் தனக்கு கிடைத்த வாய்ப்பில் சிறப்பாக ஆடி, தன்னால் தான் இந்திய அணியின் நான்காம் வரிசை சிக்கலுக்கு தீர்வாக இருக்க முடியும் என்பதை நிரூபித்ததை அடுத்து, அவர் தான் இந்திய ஒருநாள் அணியின் நான்காம் வரிசை வீரர் என்பது உறுதியாகியுள்ளது. ஆனாலும் அவ்வப்போது பேட்டிங் ஆர்டர் மாற்றி இறக்கப்பட்டார். 

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ஒருநாள் தொடர் தொடங்கவுள்ள நிலையில், ஷ்ரேயாஸ் ஐயரையே நான்காம் வரிசையில் இறக்க வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் அனில் கும்ப்ளே ஆலோசனை தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து பேசியுள்ள கும்ப்ளே, தவான் இல்லாததால் ராகுல் தான் தொடக்க வீரராக இறங்குவார். ஷ்ரேயாஸ் ஐயரின் பேட்டிங் தரத்தை நாம் பார்த்திருக்கிறோம். எனவே அவர்தான் இனிவரும் போட்டிகளிலும் நான்காம் வரிசையில் இறங்க வேண்டும் என்று கும்ப்ளே தெரிவித்துள்ளார்.