IPL 2023: ரோஹித் சர்மா அப்பவே அப்படி.. இப்ப சொல்லவா வேணும்..! அனில் கும்ப்ளே புகழாரம்
ஐபிஎல் 16வது சீசன் நாளை தொடங்கும் நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவின் கேப்டன்சி திறனை வெகுவாக புகழ்ந்துள்ளார் அனில் கும்ப்ளே.
ஐபிஎல்லில் 15 சீசன்கள் முடிந்துள்ள நிலையில், 16வது சீசன் நாளை (மார்ச் 31) தொடங்குகிறது. ஐபிஎல்லில் ஆர்சிபி, பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேபிடள்ஸ் ஆகிய 3 அணிகளும் ஒருமுறை கூட கோப்பையை வென்றிராத நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணி 5 முறை கோப்பையை வென்று அதிக முறை கோப்பையை வென்ற அணி என்ற சாதனையை படைத்துள்ளது.
மும்பை இந்தியன்ஸுக்கு 5 முறையும் கோப்பையை வென்று கொடுத்தது கேப்டன் ரோஹித் சர்மா தான். தோனியே சிஎஸ்கே அணிக்கு 4 முறை தான் கோப்பையை வென்று கொடுத்திருக்கிறார். இவ்வளவுக்கும் அவர் ஐபிஎல் தொடங்கிய 2008ம் ஆண்டிலிருந்து கேப்டனாக இருந்துவருகிறார். ஆனால் 2013ம் ஆண்டு ஐபிஎல்லின் இடையே மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன்சியை ஏற்ற ரோஹித் சர்மா, அந்த சீசனிலேயே முதல் டைட்டிலை வென்றார். அதன்பின்னர் 2015, 2017, 2019, 2020 ஆகிய சீசன்களிலும் மும்பை இந்தியன்ஸுக்கு டைட்டிலை வென்று கொடுத்தார்.
IPL 2023: கடைசி நேர அறிவிப்பு.. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் புவனேஷ்வர் குமார்
ஐபிஎல்லின் வெற்றிகரமான கேப்டனாக, தோனிக்கு மேலே இருக்கிறார் ரோஹித் சர்மா. ரோஹித் சர்மா ஐபிஎல்லில் தன்னை ஒரு மிகச்சிறந்த கேப்டனாக நிரூபித்ததன் விளைவாகத்தான் இந்திய அணியின் கேப்டன்சியையும் ஏற்றார்.
ஐபிஎல் 16வது சீசனிலும் கோப்பையை வெல்லும் முனைப்பில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக களமிறங்குகிறார் ரோஹித் சர்மா. இந்நிலையில், ரோஹித் சர்மா கேப்டன்சி செய்யும் மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்சியாளராக இருந்து அவரது செயல்பாட்டை மிகவும் நெருக்கமாக பார்த்து அவரை பற்றி நன்கு அறிந்த முன்னாள் ஜாம்பவான் அனில் கும்ப்ளே, ரோஹித் சர்மாவின் கேப்டன்சி குறித்து பேசியுள்ளார்.
ரோஹித் குறித்து பேசிய அனில் கும்ப்ளே, ரோஹித் சர்மா மனதில் பட்டதை பேசவோ கேட்கவோ, பயப்படவோ தயங்கவோ மாட்டார். அவருக்கு நல்ல அனுபவம் உள்ளது. தேவையான ஆலோசனைகளை செய்துவிட்டு முடிவுகளை அவர் தான் எடுப்பார். அதுதான் ஒரு கேப்டனுக்கான தகுதி. அப்படித்தான் இருக்க வேண்டும். 2017 ஐபிஎல்லில் மும்பை இந்தியன்ஸ் அணி புதிய அணியாக இருந்தது. மிகக்குறைந்த ஸ்கோரை வைத்து எதிரணியை கட்டுப்படுத்தி ஜெயித்தது அபாரமான விஷயம். அது அவரது கேப்டன்சி திறனுக்கு சான்று என்று அனில் கும்ப்ளே புகழாரம் சூட்டினார்.