ஐபிஎல் 12வது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. முதல் தகுதிச்சுற்று போட்டியில் சிஎஸ்கேவை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணி இறுதி போட்டிக்கு தகுதிபெற்றது. எலிமினேட்டர் போட்டியில் சன்ரைசர்ஸை வீழ்த்திய டெல்லி கேபிடள்ஸ் அணி, இரண்டாவது தகுதிச்சுற்று போட்டியில் சிஎஸ்கேவுடன் மோதுகிறது. 

நடப்பு சீசன் இறுதிக்கட்டத்தை எட்டிய நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் முன்னாள் தலைமை பயிற்சியாளருமான அனில் கும்ப்ளே, தனது கனவு ஐபிஎல் அணியை அறிவித்துள்ளார். 

அந்த அணியின் தொடக்க வீரர்களாக அதிரடி வீரர்கள் டேவிட் வார்னர் மற்றும் கேஎல் ராகுலை தேர்வு செய்துள்ளார். இந்த சீசனில் அதிக ரன்களை குவித்த வீரராக திகழும் வார்னர், ஐபிஎல்லில் அவர் ஆடிய எல்லா சீசன்களிலும் அபாரமாக ஆடிவருகிறார். கேஎல் ராகுலும் சிறந்த தொடக்க வீரர். ஆர்சிபி அணியில் ஆடியபோது சரியாக ஆடாவிட்டாலும் பஞ்சாப் அணியில் கடந்த சீசன் மற்றும் இந்த சீசனில் சிறப்பாக ஆடினார். இந்த சீசனில் ஒரு சதமும் அடித்தார். உலக கோப்பை அணியில் ராகுல் இடம்பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. 

மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களாக இளம் வீரர்களான ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோருடன் ஜாம்பவான் தோனியை தேர்வு செய்துள்ளார். ஆல்ரவுண்டர்களாக மிரட்டல் பாய்ஸ் ஆண்ட்ரே ரசல் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகிய இருவரையும் அனில் கும்ப்ளே தனது அணியில் சேர்த்துள்ளார். இருவருமே இந்த சீசனில் பேட்டிங்கில் வெளுத்து வாங்கியதோடு பவுலிங்கிலும் நல்ல பங்களிப்பு செய்தனர். 

ஸ்பின்னர்களாக இரண்டு ரிஸ்ட் ஸ்பின்னர்களை தேர்வு செய்துள்ளார் ஷ்ரேயாஸ் கோபால் மற்றும் இம்ரான் தாஹிர் ஆகிய இருவரையும் தேர்வு செய்துள்ளார். ஜெய்ப்பூர் மாதிரியான ஸ்பின்னிற்கு சாதகமில்லாத ஆடுகளத்திலேயே சிறப்பாக வீசுகிறார் என்று கோபாலை புகழ்ந்துள்ளார் கும்ப்ளே. தென்னாப்பிரிக்க அனுபவ ஸ்பின்னர் இம்ரான் தாஹிர் சிஎஸ்கே அணிக்காக தொடர்ச்சியாக தேவைப்படும்போதெல்லாம் நன்றாக வீசி விக்கெட்டுகளை வீழ்த்தி கொடுத்துள்ளார். 

ஃபாஸ்ட் பவுலர்களாக ரபாடா மற்றும் பும்ரா ஆகிய இருவரையும் தேர்வு செய்துள்ளார். இருவருமே புதிய பந்திலும் சரி, டெத் ஓவர்களிலும் சரி அபாரமாக வீசக்கூடியவர்கள். 

கும்ப்ளேவின் கனவு ஐபிஎல் அணி:

வார்னர், கேஎல் ராகுல் ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட், தோனி(கேப்டன், விக்கெட் கீப்பர்), ஆண்ட்ரே ரசல், ஹர்திக் பாண்டியா,ஷ்ரேயாஸ் கோபால், இம்ரான் தாஹிர், ரபாடா, பும்ரா.