ஐபிஎல்லில் இதுவரை 12 சீசன்கள் நடந்து முடிந்துள்ளன. அதில் இதுவரை ஒருமுறை கூட கோப்பையை கைப்பற்றிராத அணிகளில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் ஒன்று.

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி கோப்பையை வெல்லும் முனைப்பில் ஒவ்வொரு சீசனிலும் பல அதிரடி மாற்றங்களை செய்துவருகிறது. ஒவ்வொரு சீசனிலும் மாற்றங்களை மேற்கொள்வதும் அணி பின்னடைவை சந்திப்பதற்கான காரணங்களில் ஒன்று என்பதை உணராமல் அந்த அணி தொடர்ச்சியாக மாற்றங்களை செய்துவருகிறது. 

அந்த வகையில், கடந்த இரண்டு சீசன்களாக பஞ்சாப் அணியின் கேப்டனாக இருந்த அஷ்வினை அணியிலிருந்தே தூக்கியெறிய உள்ளது. டெல்லி கேபிடள்ஸ் அணி அஷ்வினை எடுக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. அந்த டீல் இன்னும் முடியவில்லை. அஷ்வினை தூக்கிவிட்டு கேஎல் ராகுல் கேப்டன் நியமிக்கப்படலாம் என்ற பேச்சு உள்ளது. 

இதற்கிடையே, கடந்த சீசனில் அந்த அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த மைக் ஹெசன் அதிலிருந்து விலகி, அடுத்த சீசனுக்கு ஆர்சிபி அணியின் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். எனவே புதிய பயிற்சியாளரை கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி தேடிவந்தது. ஆண்டி பிளவர், டேரன் லேமன், மைக் ஹசி, ஜார்ஜ் பெய்லி ஆகியோரில் ஒருவரை நியமிக்க திட்டமிட்டதாக தகவல் வெளியாகியது. பின்னர் அந்த பட்டியலில் கும்ப்ளேவும் இணைந்தார்.

இந்நிலையில், அடுத்த சீசனிற்கு கும்ப்ளேவை தலைமை பயிற்சியாளராக நியமித்துள்ளது பஞ்சாப் அணி. ஐபிஎல்லில் ஆர்சிபி அணியின் கேப்டனாகவும் அதன்பின்னர் ஆலோசகராகவும் இருந்த கும்ப்ளே, இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ஆவதற்கு முன்பு மும்பை இந்தியன்ஸ் அணியின் ஆலோசகராகவும் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.