இந்தியா - இங்கிலாந்து இடையேயான எட்ஜ்பாஸ்டன் டெஸ்ட்டில் ஸ்டூவர்ட் பிராடை அம்பயர் கெட்டில்பாரோ எச்சரித்த வீடியோ செம வைரலாகிவருகிறது.
இந்தியா - இங்கிலாந்து இடையேயான எட்ஜ்பாஸ்டன் டெஸ்ட்டில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி, ரிஷப் பண்ட் (146) மற்றும் ரவீந்திர ஜடேஜா (104) ஆகிய இருவரின் அபார சதங்களால் முதல் இன்னிங்ஸில் 416 ரன்களை குவித்தது.
இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து அணி, பேர்ஸ்டோவின் அபாரமான சதத்தால்(106) முதல் இன்னிங்ஸில் 284 ரன்கள் அடித்தது.
132 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்ஸை ஆடிய இந்திய அணியில் புஜாரா (66) மற்றும் ரிஷப் பண்ட்(57) ஆகிய இருவர் மட்டுமே சிறப்பாக ஆடி அரைசதம் அடித்தனர். மற்ற வீரர்கள் சோபிக்காததால் 2வது இன்னிங்ஸில் 245 ரன்களுக்கு ஆல் அவுட்டானது இந்தியா. இந்திய அணி மொத்தமாக 377 ரன்கள் முன்னிலை பெற, 378 ரன்கள் என்ற இலக்கை இங்கிலாந்துக்கு நிர்ணயித்தது.
இதையும் படிங்க - ENG vs IND: பும்ரா செய்த முட்டாள்தனம் தான் இந்தியாவின் பின்னடைவுக்கு காரணம்..! கெவின் பீட்டர்சன் கடும் விளாசல்
378 ரன்கள் என்ற இலக்கை விரட்டிவரும் இங்கிலாந்து அணி, 4ம் நாள் ஆட்ட முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 259 ரன்கள் அடித்துள்ளது. ஜோ ரூட்(76) மற்றும் ஜானி பேர்ஸ்டோ (72) களத்தில் உள்ளனர். 5ம் நாளான இன்றைய ஆட்டத்தில் வெற்றிக்கு வெறும் 119 ரன்கள் மட்டுமே தேவை என்பதால் இந்த போட்டியில் இங்கிலாந்தின் வெற்றி கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.
இந்த போட்டியில் 550 டெஸ்ட் விக்கெட்டுகள் என்ற மைல்கல்லை எட்டிய இங்கிலாந்தின் சீனியர் ஃபாஸ்ட் பவுலர் ஸ்டூவர்ட் பிராடுக்கு, இந்த டெஸ்ட் அவரது கெரியரில் மறக்கவேண்டிய போட்டியாக அமைந்துள்ளது.
முதல் இன்னிங்ஸில் ஒரே ஓவரில் 35 ரன்களை வாரி வழங்கி, டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு ஓவரில் அதிக ரன்களை வாரி வழங்கிய பவுலர் என்ற மோசமான சாதனையை படைத்தார்.
இதையும் படிங்க - ENG vs IND: டி20 போட்டிகளுக்கான இந்திய அணியின் வலுவான ஆடும் லெவன் இதுதான்..!
மேலும், முதல் இன்னிங்ஸில் பேட்டிங் ஆடியபோது அம்பயரிடம் திட்டும் வாங்கினார். முதல் இன்னிங்ஸில் ஸ்டூவர்ட் பிராட் பேட்டிங் ஆடியபோது பும்ரா பவுன்ஸர்களாக வீசினார். அதை அடிக்க முயன்று முடியாமல் போன விரக்தியில் அம்பயரிடம் வைடு கேட்டார் பிராட். ஆனால் வைடு கொடுக்க மறுத்த அம்பயர் ரிச்சர்ட் கெட்டில்பாரோ, அம்பயரிங்கை நாங்கள் செய்துகொள்கிறோம். நீங்கள் (பிராட்) பேட்டிங் ஆடினால் போதும் என்றார்.
அம்பயரின் பதிலால் அதிருப்தியடைந்த பிராட், அம்பயரிடம் சத்தம் போட, கோபமடைந்த அம்பயர் கெட்டில்பாரோ, நீங்கள் (பிராட்) பேசாமல் பேட்டிங் ஆட செல்லவில்லை என்றால் பிரச்னையை சந்திக்க நேரிடும். பேசாமல் வாயை மூடிக்கொண்டு போய் பேட்டிங் ஆடுங்கள் என்றார். பிராடை அம்பயர் திட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.
