ஐபிஎல் 2008ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதுவரை 12 சீசன்கள் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளன. உலகின் பணக்கார டி20 லீக் தொடர் ஐபிஎல் தான். கோடிக்கணக்கில் பணம் புழங்கும் தொடர். ஐபிஎல்லில் இரண்டே மாதத்தில் கோடிக்கணக்கில் சம்பாதிக்கலாம் என்பதாலும், ஐபிஎல் திருவிழா போல நடப்பதாலும், ஐபில்லில் ஆட வெளிநாட்டு வீரர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். 

ஆரம்பத்தில் பாகிஸ்தான் வீரர்களும் ஐபிஎல்லில் ஆடினர். பின்னர், பாகிஸ்தான் வீரர்களுக்கு மட்டும் தடைவிதிக்கப்பட்டதால், அவர்களை தவிர மற்ற அனைத்து நாட்டு வீரர்களும் ஐபிஎல்லில் ஆடுகின்றனர். 

இந்நிலையில், ஐபிஎல் தொடங்கப்பட்டபோது, ஐபிஎல்லில் ஆட ஆஸ்திரேலிய வீரர்கள் விரும்பவில்லை என்றும் அவர்களை சமாதானப்படுத்தியதாகவும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் முன்னாள் சி.இ.ஓ நீல் மேக்ஸ்வெல் தெரிவித்துள்ளார்.

2007-08ல் இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் செய்து ஆடிய டெஸ்ட் தொடரின்போது, தன்னை ஹர்பஜன் சிங் குரங்கு என திட்டியதாக பிரளயத்தை கிளப்பினார் சைமண்ட்ஸ். அது பெரும் பிரச்னையாக வெடித்தது. இதையடுத்து, அந்த சம்பவத்தின் விளைவாக, ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் உள்ளிட்ட ஆஸ்திரேலிய வீரர்கள், ஐபிஎல்லில் ஆட விரும்பவில்லை. அதன்பின்னர் அவர்களை சமாதானப்படுத்தி ஆடவைத்தது குறித்துத்தான் நீல் மேக்ஸ்வெல் பேசியுள்ளார். 

இதுகுறித்து பேசிய நீல் மேக்ஸ்வெல், ஐபிஎல் தொடங்கப்பட்டபோது, ஐபிஎல் தலைவராக இருந்த லலித் மோடி, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து வீரர்களை ஐபிஎல்லில் ஆட அழைக்குமாறு என்னிடம் சொன்னார். அதன்பின்னர் தான், நான் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் உள்ளிட்ட ஆஸ்திரேலிய வீரர்களிடம் பேசி அவர்களை சமாதானப்படுத்தி ஐபிஎல்லில் ஆட அழைத்தேன். ஆஸ்திரேலிய வீரர்களின் கண் முன்னே ஒப்பந்தம் போடப்பட்டது. இரண்டு நாட்கள் கழித்து சைமண்ட்ஸ் அரைகுறை மனதுடன் ஐபிஎல்லில் ஆட ஒப்புக்கொண்டார். ஐபிஎல் 2008 ஏலத்தில் வெளிநாட்டு வீரர்களிலேயே சைமண்ட்ஸுக்குத்தான் அதிக தொகை கொடுத்து ஏலத்தில் எடுக்கப்பட்டார். அவர் ரூ.10.2 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார் என்று நீல் மேக்ஸ்வெல் தெரிவித்துள்ளார். 

சைமண்ட்ஸ் 2008-2010 வரை டெக்கான் சார்ஜர்ஸ் அணியிலும் 2011ல் மும்பை இந்தியன்ஸ் அணியிலும் ஆடினார். மும்பை இந்தியன்ஸ் அணியில் ஹர்பஜன் சிங்குடன் இணைந்து ஆடியது குறிப்பிடத்தக்கது.