உலக கோப்பை தொடர் நேற்று தொடங்கி நடந்துவருகிறது. இந்த உலக கோப்பையை இங்கிலாந்து அல்லது இந்தியா தான் வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இங்கிலாந்து அணி மீது பல முன்னாள் வீரர்களும் வைத்த நம்பிக்கைக்கு பாத்திரமாக அந்த அணி முதல் போட்டியிலேயே நடந்துகொண்டது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் போட்டியில் இங்கிலாந்து அணி 104 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டி வெஸ்ட் இண்டீஸ் மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நடந்துவருகிறது. 

இந்தியா அல்லது இங்கிலாந்து அணிதான் கோப்பையை வெல்லும் என பல முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்தனர். அதேபோல அரையிறுதிக்கு எந்தெந்த அணிகள் முன்னேறும் என்றால், அனைத்து முன்னாள் வீரர்களுமே இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய 3 அணிகளை கண்டிப்பாக கூறினர். எஞ்சிய ஒரு இடத்திற்கு தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான் ஆகிய 4 அணிகளையும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு அணியை தேர்வு செய்தனர்.

இந்நிலையில், உலக கோப்பையில் ஆடும் ஒவ்வொரு அணி குறித்தும் பேசிய இங்கிலாந்து முன்னாள் ஆல்ரவுண்டர் ஆண்ட்ரூ ஃபிளிண்டாஃப், இந்திய அணியை பற்றி பேசும்போது, அரையிறுதிக்கு கண்டிப்பாக முன்னேறும். அரையிறுதியில் இங்கிலாந்துடன் மோதவில்லை என்றால் இறுதி போட்டிக்கும் இந்திய அணி முன்னேறும். ஆனால் இரண்டில் ஏதாவது ஒன்றில் கண்டிப்பாக இந்திய அணி தோற்றுவிடும். இறுதியில் கோப்பையை இங்கிலாந்து தான் வெல்லும் என ஃப்ளிண்டாஃப் தெரிவித்தார்.