இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் நேற்று தொடங்கி நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் ஆடிவருகிறது. 

முதல் நாள் ஆட்டத்தில் 49 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்டன. மழையால் முதல் நாள் ஆட்டத்தில் பாதி ஆட்டம் தடைபட்டது. தொடக்க வீரர் அபித் அலி 16 ரன்களிலும் கேப்டன் அசார் அலி ரன்னே அடிக்காமலும் ஆட்டமிழந்தனர். அதனால் 43 ரன்களுக்கே 2 விக்கெட்டுகளை இழந்தது பாகிஸ்தான் அணி. 

அதன்பின்னர், ஒருமுனையில் நிலைத்து நின்ற ஷான் மசூத்துடன் பாபர் அசாம் ஜோடி சேர்ந்தார். ஷான் மசூத் நிதானமாக ஆட, பாபர் அசாம் பவுண்டரிகளாக விளாசி வேகமாக ஸ்கோர் செய்தார். விரைவாக அரைசதம் அடித்த பாபர் அசாம், முதல் நாள் ஆட்ட முடிவில் 100 பந்தில் 69 ரன்களை அடித்திருந்தார். ஷான் மசூத் அரைசதத்தை நெருங்கிய நிலையில், முதல் நாள் ஆட்டம் முடிந்தது. 

முதல் நாளில் பாபர் அசாம் ஆடிய விதம் அருமையானது. கடினமான இங்கிலாந்து கண்டிஷனில், அனுபவ ஃபாஸ்ட் பவுலர்களான ஆண்டர்சன் - பிராட் ஆகியோரின் ஸ்விங்கையெல்லாம் அசால்ட்டாக எதிர்கொண்டதுடன், அடித்தும் ஆடினார் பாபர் அசாம். பாபர் அசாம் இங்கிலாந்து பவுலர்கள் மீது ஆதிக்கம் செலுத்தி ஆடியவிதம், முன்னாள் ஜாம்பவான்கள் பலரையும் கவர்ந்தது. 

பாபர் அசாம் நேற்று ஆடிய விதத்தை வைத்து பார்த்தபோது, இரண்டாம் நாளிலும் சிறப்பாக ஆடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஏனெனில் முதல் நாள் ஆட்டத்தில் ஆடிய விதம் அந்த மாதிரி. அவருமே இன்று சிறப்பாக ஆட வேண்டும் என்றுதான் வந்திருப்பார். ஆனால் இரண்டாம் நாளான இன்றைய ஆட்டத்தின் முதல் ஓவரிலேயே ஆண்டர்சன் பாபர் அசாமை வீழ்த்தினார். பாபர் அசாம் 69 ரன்களில், ஆண்டர்சனின் பந்தில் ரூட்டிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். 

2ம் நாளான இன்றைய ஆட்டத்தில் பாபர் அசாம் முதல் ஓவரிலேயே ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். பாபர் அசாம் இன்றைக்கு முதல் ஓவரிலேயே ஆட்டமிழப்பார் என யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். ஆனால் ஆண்டர்சன்,பாபர் அசாமை வீழ்த்தி இங்கிலாந்து அணிக்கு திருப்புமுனையை ஏற்படுத்தி கொடுத்தார். அதன்பின்னர் ஆசாத் ஷாஃபிக், முகமது ரிஸ்வான் ஆகிய இருவரும் ஒற்றை இலக்கத்தில் வெளியேற, 139வது ரன்னுக்கு 3வது விக்கெட்டை இழந்த பாகிஸ்தான் அணி, 176 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும், மறுமுனையில் தொடக்க வீரர் ஷான் மசூத் களத்தில் நங்கூரம் போட்டு நிலைத்து நின்று சதத்தை நோக்கி ஆடிவருகிறார். 

உணவு இடைவேளை 5 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்களை அடித்துள்ளது பாகிஸ்தான் அணி. ஷான் மசூத் 77 ரன்களுடன் களத்தில் உள்ளார்.