உலக கோப்பை தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. லீக் சுற்று போட்டிகள் கடந்த சனிக்கிழமை முடிந்த நிலையில், நாளை அரையிறுதி போட்டிகள் தொடங்குகின்றன.

இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து ஆகிய நான்கு அணிகளும் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன. மான்செஸ்டரில் நாளை நடக்கும் முதல் அரையிறுதி போட்டியில் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் இந்திய அணியும் நான்காமிடத்தில் இருக்கும் நியூசிலாந்து அணியும் மோதுகின்றன. 

வரும் 11ம் தேதி நடக்கும் இரண்டாவது அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்த உலக கோப்பையை இந்தியா அல்லது இங்கிலாந்து அணி தான் வெல்லும் என்று உலக கோப்பை தொடங்குவதற்கு முன்பே பல ஜாம்பவான்கள் கணித்து கருத்து தெரிவித்தனர். அந்த வகையில், இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் இறுதி போட்டியில் மோதுவதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது. 

இந்நிலையில், உலக கோப்பை குறித்து பேசியுள்ள பாகிஸ்தான் முன்னாள் ஃபாஸ்ட் பவுலர் ஷோயப் அக்தர், அரையிறுதி நெருக்கடியையும் அழுத்தத்தையும் சமாளித்து நியூசிலாந்து அணி சிறப்பாக விளையாட மாட்டார்கள். எனவே இந்திய அணி இறுதி போட்டிக்கு செல்வது உறுதி. உலக கோப்பை துணைக்கண்டத்தில்தான் இருக்க வேண்டும். எனவே இந்திய அணி கோப்பையை வென்றால் மகிழ்ச்சிதான். உலக கோப்பையை இந்திய அணி துணைக்கண்டத்திற்கு கொண்டுவருவார்கள் என நம்புவதாக அக்தர் தெரிவித்துள்ளார்.