பும்ரா, ஷமி, புவனேஷ்வர் குமார், இஷாந்த் சர்மா ஆகியோருடன் இளம் ஃபாஸ்ட் பவுலர்களான நவ்தீப் சைனி, தீபக் சாஹர் ஆகியோரும் இணைந்து மிரட்டுகின்றனர். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் காயம் காரணமாக பும்ரா ஆடாததால், இஷாந்த் சர்மாவும் ஷமியும்தான் முதல் போட்டியில் ஆடினார்கள். 

இந்திய ஆடுகளங்கள் ஸ்பின்னிற்கு சாதகமாக இருக்கும் என்பதால் 2 ஃபாஸ்ட் பவுலர்கள் மற்றும் 2 ஸ்பின்னர்கள் என்ற கலவையில் தான் இந்திய அணி இறங்கும். அந்தவகையில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியிலும் அப்படித்தான் இறங்கியது. இஷாந்த் சர்மா மற்றும் ஷமி ஆகிய இருவரும் ஃபாஸ்ட் பவுலர்களாக களமிறங்கினர். 

போட்டி நடந்த விசாகப்பட்டினம் ஆடுகளம் முழுக்க முழுக்க ஸ்பின்னிற்கு சாதகமாக இருந்தது. பிட்ச்சில் ஒன்றுமே இல்லை. எனவே ஃபாஸ்ட் பவுலர்கள் விக்கெட்டே வீழ்த்த முடியாமல் திணறினர். எதிரணியில் ரபாடா, ஃபிளாண்டர் ஆகியோருக்கு சுத்தமாக விக்கெட்டே விழவில்லை. குறிப்பாக மூன்றாம் நாளுக்கு பிறகு ஃபாஸ்ட் பவுலர்களின் பருப்பு சுத்தமாக வேகவில்லை. 

எனவே கடைசி இன்னிங்ஸில் அஷ்வினும் ஜடேஜாவும் தான் அசத்துவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், யாருமே எதிர்பார்க்காத வகையில், மொக்கை பிட்ச்சில் அபாரமாக வீசி 5 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணிக்கு வெற்றியை தேடிக்கொடுத்தவர் ஷமி தான். ஸ்பின்னிற்கு சாதகமான ஆடுகளத்தில் அஷ்வினே விக்கெட் வீழ்த்த முடியாமல் திணறிய நிலையில், அபாரமாக பந்துவீசிய ஷமி, டுப்ளெசிஸ், பவுமா, டி காக் ஆகியோரை கிளீன் போல்டாக்கி அனுப்பினார். முதல் இன்னிங்ஸில் ஒரு விக்கெட் கூட வீழ்த்தாத ஷமி, இரண்டாவது இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக திகழ்ந்தார். 

இந்நிலையில், ஷமி குறித்து தனது யூடியூப் சேனலில் பேசியுள்ள ஷோயப் அக்தர், இந்திய அணி உலக கோப்பையில் தோற்று வெளியேறிய பிறகு, ஷமி எனக்கு ஒருநாள் ஃபோன் செய்தார். அப்போது, இந்திய அணிக்காக என்னால் வெற்றியை தேடிக்கொடுக்க முடியவில்லை என்று வருந்தினார். நான் அவரிடம், நம்பிக்கையை இழந்துவிடாமல் ஃபிட்னெஸில் கவனம் செலுத்துமாறு அறிவுறுத்தினேன். மேலும் அடுத்து இந்தியாவில் நடக்கவிருக்கும் தொடர்களில்(தென்னாப்பிரிக்க தொடர்) நீங்கள் நன்றாக ஆடுவீர்கள் என்று நம்பிக்கையளித்தேன். 

உங்களை தாறுமாறான செம ஃபாஸ்ட் பவுலராக பார்க்க விரும்புகிறேன் என்று சொன்னேன். அவர் நல்ல வேகமாக வீசுவதுடன் நன்றாக ஸ்விங்கும் செய்கிறார். ரிவர்ஸ் ஸ்விங் கூட செய்கிறார். துணைக்கண்ட பவுலர்கள் நிறைய பேருக்கு ரிவர்ஸ் ஸ்விங் வீசவராது. ஆனால் ஷமி ரிவர்ஸ் ஸிவிங் செய்கிறார். எனவே அவரிடம், உங்களால் ரிவர்ஸ் ஸ்விங் கிங் ஆக முடியும் என கூறினேன். 

இப்போது தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் நீங்களே பார்த்தீர்கள். ஒன்றுமே இல்லாத விசாகப்பட்டின ஆடுகளத்தில் விக்கெட்டுகளை வீழ்த்தியிருகிறார். ஷமியை நினைத்து நான் சந்தோஷப்படுகிறேன். விரா கோலி ஒரு சிறந்த கேப்டன். கேப்டன்சியை என்ஜாய் பண்ணி செய்கிறார். பவுலர்களுக்கு முழு சுதந்திரம் கொடுக்கிறார். எனவே அவரது கேப்டன்சியின் கீழ் ஷமி இன்னும் அசத்துவார் என அக்தர் தெரிவித்துள்ளார்.