பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனும் அதிரடி வீரருமான அஃப்ரிடி, தனது சுயசரிதையை “கேம் சேஞ்சர்” என்ற பெயரில் எழுதி வெளியிட்டுள்ளார். 

அதில் தனது உண்மையான வயதை வெளியிட்டு சர்ச்சையை கிளப்பினார். அதிகாரப்பூர்வ ஆவணங்களில் உள்ளதைவிட தனக்கு 5 வயது அதிகம் எனக்கூறி சர்ச்சையை கிளப்பினார். அதுமட்டுமல்லாமல் காம்பீரை கடுமையாக தாக்கி எழுதியிருந்தார். காம்பீர் கிரிக்கெட்டில் பெரிய சாதனை எதுவும் செய்யாவிட்டாலும் திமிருக்கு ஒன்றும் குறைச்சல் இல்லை என்று கடுமையாக சாடியிருந்தார். 

காம்பீரின் கேரக்டரும் செயல்பாடுகளும் மோசமானது என்றும் கடுமையாக விமர்சித்திருந்தார். அஃப்ரிடியின் விமர்சனத்துக்கு காம்பீர் பதிலடி கொடுக்க, அதற்கு அஃப்ரிடி மீண்டும் பதிலடி கொடுக்க, இருவரது வாக்குவாதமும் ஒருவழியாக முடிவுக்கு வந்தது. 

காம்பீரை மட்டுமல்லாது சொந்த அணி பயிற்சியாளர், கேப்டனையே கடுமையாக சாடியிருந்தார். வக்கார் யூனிஸ் நல்ல பவுலர் என்றாலும் அவர் ஒரு சிறந்த கேப்டன் இல்லை. அவரால் அணியை ஒருங்கிணைக்க முடியவில்லை. அதனால்தான் 2003 உலக கோப்பையில் பாகிஸ்தான் அணி சரியாக ஆடமுடியவில்லை என விமர்சித்திருந்தார். 

மேலும் அணியில் தன்னை சீனியர் வீரர்களும் முன்னாள் பயிற்சியாளர் ஜாவித் மியான்தத்தும் கடுமையாக நடத்தியதாக சுயசரிதையில் தெரிவித்திருந்தார். 1999ம் ஆண்டு இந்தியாவில் நடந்த டெஸ்ட் தொடரில் சென்னை டெஸ்ட் போட்டிக்கு முன்னர் தன்னை வலைப்பயிற்சியில் ஈடுபட கூட அப்போதைய பயிற்சியாளர் ஜாவித் மியான்தத் அனுமதிக்கவில்லை என தெரிவித்திருந்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. 

அஃப்ரிடியின் சுயசரிதையை படித்த பாகிஸ்தான் வீரர் இம்ரான் ஃபர்ஹத், அஃப்ரிடியை கடுமையாக விமர்சித்திருந்தார். வயதை குறைத்துக்காட்டி, ஏமாற்றி ஆடிவிட்டு, தான் என்னவோ பெரிய உத்தமன் போல மிகப்பெரிய சிறந்த வீரர்களை விமர்சிக்கிறார் என அஃப்ரிடியை கடுமையாக சாடியிருந்தார் இம்ரான் ஃபர்ஹத். 

இந்நிலையில், அஃப்ரிடிக்கு ஆதரவாக பாகிஸ்தான் அணியின் முன்னாள் ஃபாஸ்ட் பவுலரும் அஃப்ரிடியின் சக வீரருமான ஷோயப் அக்தர் குரல் கொடுத்துள்ளார். இதுகுறித்து பேசியுள்ள அக்தர், அஃப்ரிடி சுயசரிதையில் எழுதியிருப்பது உண்மைதான். சீனியர் வீரர்கள் அஃப்ரிடியை கடுமையாக நடத்தினார்கள். அதை நானே நேரில் பார்த்திருக்கிரேன். சொல்லப்போனால், அஃப்ரிடி தனக்கு நேர்ந்ததை முழுமையாக கூட சொல்லவில்லை. அவர் சொன்னதே குறைவுதான் என்று அஃப்ரிடிக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார்.