உலக கோப்பை நெருங்கிய நிலையில், இந்திய அணியின் பேட்டிங் ஆர்டர், பவுலிங் என அனைத்துமே ஓரளவிற்கு உறுதியாகிவிட்டது. 2 இடங்களுக்கான வீரர்கள் மட்டுமே இன்னும் உறுதி செய்யப்படவில்லை. 

இந்திய அணி முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு மிகச்சிறந்த பவுலிங் யூனிட்டை பெற்றிருப்பது கூடுதல் பலம். உலக கோப்பையில் இந்திய பவுலர்கள் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்திய அணியின் பேட்டிங் ஆர்டரும் நன்றாக செட் ஆகிவிட்டது. ரோஹித், தவான், கோலி என முதல் மூன்று வீரர்கள் அணிக்கு வலு சேர்க்கின்றனர். டாப் ஆர்டர் வலுவாக இருப்பதே இந்திய அணியின் மிகப்பெரிய பலம். நான்காம் இடத்திற்கு சரியான வீரரை தேர்வு செய்ய நீண்ட தேடுதல் படலம் நடைபெற்றது. 

ரஹானே, ஷ்ரேயாஸ் ஐயர், ரெய்னா, மனீஷ் பாண்டே, ராயுடு, தினேஷ் கார்த்திக் என பல வீரர்களை அந்த வரிசையில் களமிறக்கி பரிசோதித்தது இந்திய அணி நிர்வாகம். இவர்களில் தேறியவர் ராயுடுதான். அவர்தான் அந்த வரிசையில் ஓரளவிற்கு நன்றாக ஆடி நம்பிக்கையளித்தார். இதையடுத்து அவருக்கு தொடர்ந்து வாய்ப்பு வழங்கப்பட்டது. அந்த வாய்ப்புகளை பயன்படுத்தி சிறப்பாகவே ஆடினார் ராயுடு.

ஆசிய கோப்பை, வெஸ்ட் இண்டீஸ் தொடர், ஆஸ்திரேலிய தொடர் ஆகியவற்றில் நன்றாக ஆடினார். நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் இக்கட்டான சூழலில் அவர் அடித்த 90 ரன்கள் மிகவும் சிறப்பும் முக்கியத்துவமும் வாய்ந்தது. அந்த இன்னிங்ஸ் அவரது சிறப்பான பேட்டிங்குகளில் ஒன்று. அதன்பிறகு அவர் நான்காம் வரிசையை உறுதி செய்துவிட்டதாகவே பார்க்கப்பட்டது. 

ஆனால் இதற்கிடையே பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறிய ஒரு கருத்து கடும் விவாதத்துக்கு உள்ளானது. அதாவது தேவைப்பட்டால் விராட் கோலி நான்காம் வரிசையில் களமிறக்கப்படுவார் என்று சாஸ்திரி தெரிவித்தார். ராகுலை மூன்றாம் வரிசையில் இறக்கிவிட்டு கோலி 4ம் வரிசையில் இறக்கப்படுவார் என்ற கருத்து கடும் விவாதத்தை ஏற்படுத்தியது. முதல் மூன்று வீரர்கள் நன்றாக செட் ஆகிவிட்ட நிலையில், அதை மாற்ற வேண்டிய அவசியமே இல்லை என்பது சில முன்னாள் வீரர்களின் கருத்து.

ரோஹித், தவான், கோலி என முதல் மூன்று வீரர்கள் சிறப்பாக ஆடிவரும் நிலையில், அந்த ஆர்டரை மாற்ற வேண்டிய தேவையில்லை. ராயுடுவே நான்காம் வரிசையில் இறங்கலாம். அவர் நான்காம் வரிசையில் சிறப்பாக ஆடி திறமையை நிரூபித்துள்ளார் என்பதால் அவரை மாற்ற வேண்டிய அவசியமில்லை என்பது பலரது கருத்தாக உள்ளது. 

அதிலும் குறிப்பாக மூன்றாம் வரிசையில் மிகச்சிறப்பாக ஆடிவரும் கோலியை நான்காம் வரிசைக்கு அனுப்ப வேண்டிய அவசியமே கிடையாது. கோலியை நான்காம் வரிசையில் இறக்கும் திட்டத்தை கடுமையாக விமர்சித்துள்ளார் அஜித் அகார்கர்.

இதுகுறித்து பேசிய அகார்கர், மூன்றாம் வரிசையில் இறங்கி 32 சதங்களை அடித்துள்ளார் கோலி. மூன்றாம் வரிசையில் கோலியின் நம்பரே அவர் எந்தளவிற்கு அந்த வரிசையில் பங்காற்றி கொண்டிருக்கிறார் என்பதை பறைசாற்றும். அவர் நான்காம் வரிசையிலும் நன்றாக ஆடியிருக்கிறார். ஆனால் அவரை ஏன் மீண்டும் நான்காம் வரிசையில் இறக்க வேண்டும். அதற்கான அவசியமே இல்லை. மூன்றாம் வரிசையில் மிகச்சிறப்பாக ஆடி பல சாதனைகளை குவித்துள்ளார். மூன்றாம் வரிசையில் இறங்கினாலும் கடைசிவரை களத்தில் நின்று ஃபினிஷர் வேலையையும் செய்திருக்கிறார். அதனால் அவரை நான்காம் வரிசையில் இறக்கலாம் என்ற முடிவு முட்டாள்தனமானது. முதல் மூன்று பேட்ஸ்மேன்கள் அபாரமாக ஆடி அணிக்கு வெற்றிகளை குவித்து கொண்டிருக்கும்போது அந்த பேட்டிங் வரிசையை மாற்ற தேவையில்லை என்று அகார்கர் அதிரடியாக தெரிவித்துள்ளார். 

விராட் கோலி ஒருநாள் கிரிக்கெட்டில் 39 சதங்களை விளாசியுள்ளார். இதில் 32 சதங்கள் மூன்றாம் வரிசையில் இறங்கி அடித்தது. 62.98 என்ற சராசரியுடன் மூன்றாம் வரிசையில் 8000 ரன்களுக்கு மேல் குவித்துள்ளார் விராட் கோலி. நான்காம் வரிசையிலும் நன்றாகவே ஆடியுள்ளார். 58.13 என்ற சராசரியுடன் 1744 ரன்களை குவித்துள்ளார். அவர் நான்காம் வரிசையில் நன்றாக ஆடியிருந்தாலும் மூன்றாம் வரிசைதான் கோலிக்கு ஏற்ற இடம் என்பது அகார்கரின் திட்டவட்டமான கருத்து.