பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் அதிரடி வீரர் அஃப்ரிடி, ஒரு மிகச்சிறந்த ஆல்ரவுண்டர். அதிரடிக்கு பெயர்போனவர். இவரது அதிரடி பேட்டிங்கால், பூம் பூம் அஃப்ரிடி என்று அழைக்கப்படுகிறார். 

சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள்(476 சிக்ஸர்கள்) விளாசிய வீரர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர். ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேக சதமடித்த அஃப்ரிடியின் சாதனை 18 ஆண்டுகளுக்கு பிறகே முறியடிக்கப்பட்டது. பேட்டிங்கில் எந்த வரிசையில் இறங்கினாலும் அதிரடியாகவே ஆடுவார். பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என அனைத்திலும் மிரட்டியவர் அஃப்ரிடி.

1996ம் ஆண்டிலிருந்து 2018ம் ஆண்டுவரை பாகிஸ்தான் அணியில் சர்வதேச போட்டிகளில் ஆடினார். 2015ம் ஆண்டுக்கு பிறகு ஒருநாள் போட்டிகளில் ஆடவில்லை. 2018ம் ஆண்டுவரை டி20 போட்டிகளில் ஆடினார். கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்றுவிட்ட அஃப்ரிடி, தனது சுயசரிதையை எழுதியுள்ளார். 

”கேம் சேஞ்சர்” என்ற பெயரில் தனது சுயசரிதையை எழுதி வெளியிட்டுள்ளார். அதில், தான் பிறந்தது 1975ம் ஆண்டு என்று குறிப்பிட்டுள்ளார். ஈஎஸ்பிஎன் கிரிக் இன்ஃபோ தளத்தில் அஃப்ரிடியின் புரௌஃபைலில் அவர் 1980ம் ஆண்டு பிறந்ததாக உள்ளது. 1980ம் ஆண்டுதான் இதுவரை அஃப்ரிடியின் அதிகாரப்பூர்வ பிறந்த ஆண்டாக இருந்தது. ஆனால் தான் 1975ம் ஆண்டு பிறந்ததாக அஃப்ரிடி கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

தான் 1975ம் ஆண்டு பிறந்ததாகவும் அணியில் அறிமுகமானபோது அதிகாரிகள் தவறாக குறிப்பிட்டுவிட்டதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் தனது 19வது வயதில் அறிமுகமானதாக அவர் தெரிவித்துள்ளார். 1996ம் ஆண்டு அஃப்ரிடி சர்வதேச போட்டிகளில் அறிமுகமானார். அதிகாரப்பூர்வமாக அவர் 1980ம் ஆண்டு பிறந்ததாக உள்ளதால் அவரது 16வது வயதில் அறிமுகமானதாக இதுவரை அறியப்பட்டது. 

1975ம் ஆண்டு பிறந்ததாக கூறும் அஃப்ரிடி, தனது 19வது வயதில் அறிமுகமானதாக கூறுகிறார். 1975ம் ஆண்டு அவர் பிறந்திருந்தால், அவர் அறிமுகமான 1996ம் ஆண்டில் அவரது வயது 21. ஆனால் அவர் 19வது வயதில் அறிமுகமானதாக கூறுகிறார். 1975ம் ஆண்டு பிறந்ததுதான் உண்மை என்றால் 21 வயதில் அறிமுகமானதாக தெரிவித்திருக்க வேண்டும். ஆனால் அவர் தவறுதலாக 19 வயது என்று தெரிவித்துவிட்டாரோ என்னவோ..?

இளம் வயதில் அதிவேக சதம் அடித்த வீரர் என்ற சாதனை அவரிடத்தில் இருக்கிறது. தான் ஆடிய காலத்தில் இதுகுறித்து வாய் திறக்காமல், சுயசரிதையில் தான் 1975ம் ஆண்டு பிறந்ததாக கூறியுள்ளார். கிரிக்கெட் ஆடிய காலத்தில் உண்மையை மறைத்து ஆடியுள்ளார்.