தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் 72 ரன்களை குவித்ததன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்களை குவித்த வீரர் என்ற சாதனையை படைத்த விராட் கோலிக்கு ஐசிசி வாழ்த்து தெரிவித்துள்ளது. 

சர்வதேச கிரிக்கெட்டில் சதங்களையும் சாதனைகளையும் குவித்து கெத்தாக வலம்வரும் கோலி, போட்டிக்கு போட்டி ஏதாவது ஒரு சாதனையை முறியடித்து புதிய மைல்கல்லை எட்டிவருகிறார். அந்தவகையில், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியிலும் சாதனை படைக்க தவறவில்லை. 

தென்னாப்பிரிக்கா நிர்ணயித்த 150 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு வழக்கம்போலவே கோலி பொறுப்புடன் ஆடி வெற்றியை தேடிக்கொடுத்தார். 72 ரன்களை குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்து இந்திய அணியை வெற்றி பெற செய்தார். 

இந்த போட்டியில் 72 ரன்கள் அடித்ததன் மூலம், சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 2441 ரன்களை குவித்த கோலி, டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்களை அடித்த வீரர் என்ற சாதனையை படைத்தார். ரோஹித் சர்மா தான் அதிக ரன்கள் குவித்த வீரராக இருந்தார். ஆனால் ரோஹித் நேற்று வெறும் 12 ரன்கள் மட்டுமே அடித்ததால், 2434 ரன்களுடன் இரண்டாமிடத்தில் உள்ளார். 

இதன்மூலம் டி20 கிரிக்கெட்டிலும் விராட் கோலியின் சராசரி 50ஐ கடந்தது. டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் ஏற்கனவே 50க்கு அதிகமாக சராசரி வைத்திருக்கும் கோலி, டி20 கிரிக்கெட்டிலும் 50க்கு அதிகமான சராசரியை வைத்துள்ளார். அதற்காக ஐசிசி, விராட் கோலியை டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்திருந்தது. 

இந்த டுவீட்டை கண்ட பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் ஷாஹித் அஃப்ரிடி, வாழ்த்துக்கள் விராட் கோலி. நீங்கள் தலைசிறந்த வீரர். உங்களது வெற்றிகரமான கிரிக்கெட் பயணம் தொடர எனது வாழ்த்துக்கள். உலகம் முழுதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களுக்கு உங்கள் ஆட்டத்தின் மூலம் தொடர்ந்து விருந்தளியுங்கள் என்று வாழ்த்தியுள்ளார்.