பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனும் அதிரடி ஆல்ரவுண்டருமான அஃப்ரிடி, கேம் சேஞ்சர் என்ற பெயரில் தனது சுயசரிதையை எழுதி சர்ச்சைகளை கிளப்பியதோடு விமர்சனங்களையும் எதிர்கொண்டு வருகிறார். 

ஆல்டைம் சிறந்த உலக கோப்பை அணியை அண்மையில் தேர்வு செய்திருந்தார் அஃப்ரிடி. அதில், சச்சின் டெண்டுல்கர், தோனி, பிரயன் லாரா, முத்தையா முரளிதரன் ஆகிய ஜாம்பவான்களை 11 வீரர்களை கொண்ட அணியில் எடுக்கவில்லை.

அவரது அணியில் இடம்பெற்றிருந்த வீரர்களில் விராட் கோலியை தவிர மற்ற அனைவருமே 1990கள் மற்றும் 2000ம் ஆண்டுகளில் ஆடிய வீரர்கள். அதேபோல விராட் கோலி மட்டுமே அந்த அணியில் இடம்பெற்றிருந்த ஒரேயொரு இந்திய வீரர். 

அஃப்ரிடி தேர்வு செய்துள்ள ஆல்டைம் சிறந்த உலக கோப்பை அணி:

சயீத் அன்வர், ஆடம் கில்கிறிஸ்ட், ரிக்கி பாண்டிங், விராட் கோலி, இன்சமாம் உல் ஹக், ஜாக் காலிஸ், வாசிம் அக்ரம், கிளென் மெக்ராத், ஷேன் வார்னே, சாக்லைன் முஷ்டாக், ஷோயப் அக்தர்.

இந்நிலையில், சச்சின் டெண்டுல்கர், தோனி ஆகிய ஜாம்பவான்களை விட்டுவிட்டு விராட் கோலியை எடுத்ததற்கான காரணத்தை அஃப்ரிடி விளக்கியுள்ளார். இதுகுறித்து பேசிய அஃப்ரிடி, சச்சினும் தோனியும் இந்திய அணிக்காக நிறைய சாதனைகளையும் வெற்றிகளையும் குவித்துக்கொடுத்து சிறந்த பங்காற்றியுள்ளனர். ஆனால் விராட் கோலி களத்தில் கம்பீரமாக நின்று ஆடுவார். அவர் பேட்டிங் ஆடுவதை பார்க்கவே அருமையாக இருக்கும். எனவே தான் விராட் கோலியை தேர்வு செய்ததாக அஃப்ரிடி விளக்கமளித்துள்ளார்.