வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 224 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற ஆஃப்கானிஸ்தான் அணி, டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஆஸ்திரேலியாவுடன் ஒரு சாதனையை பகிர்ந்துள்ளது. 

கடந்த ஆண்டு இந்தியாவுக்கு எதிராக முதல் டெஸ்ட் போட்டியை ஆடிய ஆஃப்கானிஸ்தான் அணி, அந்த போட்டியில் இந்தியாவிடம் படுதோல்வி அடைந்தது. அதன்பின்னர் அயர்லாந்துடன் ஆடிய போட்டியில் அந்த அணியை வீழ்த்தி ஆஃப்கானிஸ்தான் முதல் டெஸ்ட் வெற்றியை பதிவு செய்தது. 

உலக கோப்பைக்கு பின்னர், ஆஃப்கானிஸ்தான் அணியின் கேப்டன் நீக்கப்பட்டு அனைத்துவிதமான அணிகளுக்கும் ரஷீத் கான் கேப்டனாக்கப்பட்டார். ஆஃப்கானிஸ்தான் அணியின் எதிர்காலத்தை கருத்தில்கொண்டு எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கை, சரியானதுதான் என அந்த அணி நிர்வாகத்திற்கு நம்பிக்கையளித்துள்ளார் ரஷீத் கான். 

ரஷீத் கான் கேப்டனான பிறகு நடந்த முதல் டெஸ்ட் போட்டியிலேயே அந்த அணி அபாரமான வெற்றியை பதிவு செய்துள்ளது. வங்கதேசத்தில் அந்த அணிக்கு எதிராக நடந்த ஒரேயொரு டெஸ்ட் போட்டியில் 224 ரன்கள் வித்தியாசத்தில் ஆஃப்கானிஸ்தான் அணி அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் ஒரு கேப்டனாக, சிறப்பான ஆல்ரவுண்ட் ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை முன்னின்று வழிநடத்தினார் ரஷீத் கான்.

டெஸ்ட் கெரியரை இந்தியாவிற்கு எதிராக தொடங்கிய ஆஃப்கானிஸ்தான் அணி, அந்த போட்டியில் இந்தியாவிடம் தோற்ற நிலையில், அதற்கடுத்த இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் 2 வெற்றிகளை விரைவில் பெற்ற அணிகளின் லிஸ்ட்டில் ஆஸ்திரேலியாவுடன் முதலிடத்தை பகிர்ந்துகொண்டுள்ளது ஆஃப்கானிஸ்தான் அணி. 

ஆஃப்கானிஸ்தான் அணி டெஸ்ட் கிரிக்கெட் ஆட ஆரம்பித்த பின்னர், முதல் 3 போட்டிகளிலேயே 2 வெற்றிகளை பெற்றுவிட்டது. இதற்கு முன் ஆஸ்திரேலிய அணியும் முதல் 2 வெற்றிகளை 3 போட்டிகளிலேயே பெற்று முதலிடத்தில் உள்ளது. அந்த இடத்தை தற்போது ஆஃப்கானிஸ்தான் அணியும் பகிர்ந்துள்ளது. இந்த பட்டியலில் முதல் 4 போட்டிகளில் 2 வெற்றிகளை பெற்றுவிட்ட இங்கிலாந்து அணி இரண்டாமிடத்தில் உள்ளது. இந்திய அணி 30வது போட்டியில்தான் இரண்டாவது வெற்றியை பெற்றுள்ளது. அதனால் இந்த பட்டியலில் 7வது இடத்தில் உள்ளது. கடைசி இடத்தில் வங்கதேச அணி உள்ளது.