ஸ்காட்லாந்துக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ஆஃப்கானிஸ்தான் அணி வீரர்கள் ஹஸ்ரதுல்லா, நஜிபுல்லா, ரஹ்மானுல்லா ஆகிய மூவரின் அதிரடியான பேட்டிங்கால் 20 ஓவரில் 190 ரன்களை குவித்த ஆஃப்கானிஸ்தான் அணி, 191 ரன்கள் என்ற கடின இலக்கை ஸ்காட்லாந்துக்கு நிர்ணயித்துள்ளது. 

டி20 உலக கோப்பையில் ஷார்ஜாவில் இன்று நடந்துவரும் போட்டியில் ஆஃப்கானிஸ்தானும் ஸ்காட்லாந்தும் ஆடிவருகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஃப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் ஆடியது.

ஆஃப்கானிஸ்தான் அணியின் தொடக்க வீரர்கள் ஹஸ்ரதுல்லா சேஸாய் மற்றும் முகமது ஷேஷாத் ஆகிய இருவரும் இணைந்து அதிரடியான தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 5.5 ஓவரில் 54 ரன்களை சேர்த்து கொடுத்தனர். ஷேஷாத் 22 ரன்னில் ஆட்டமிழந்தார்.

அதிரடியாக ஆடிய ஹஸ்ரதுல்லா சேஸாய் 30 பந்தில் 3 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 44 ரன்களை விளாசி ஆட்டமிழந்தார். அதன்பின்னர் ரஹ்மானுல்லா குர்பாஸ் மற்றும் நஜிபுல்லா ஜட்ரான் ஆகிய இருவரும் அதிரடியை தொடர்ந்தனர். இவர்கள் இருவரும் இணைந்து 3வது விகெட்டுக்கு 87 ரன்களை குவித்தனர். குர்பாஸ் 4 சிக்ஸர்களுடன் 46 ரன்களை விளாசி ஆட்டமிழக்க, அதிரடியாக ஆடி பவுண்டரியும் சிக்ஸருமாக விளாசிய நஜிபுல்லா அரைசதம் அடித்தார்.

34 பந்தில் 5 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 59 ரன்களை குவித்த நஜிபுல்லா ஜட்ரான், கடைசி ஓவரின் கடைசி பந்தில் ஆட்டமிழந்தார். கடைசி நேரத்தில் களத்திற்கு வந்த கேப்டன் முகமது நபி தன் பங்கிற்கு 4 பந்தில் 11 ரன்கள் அடிக்க, 20 ஓவரில் 190 ரன்களை குவித்த ஆஃப்கானிஸ்தான் அணி, 191 ரன்கள் என்ற கடின இலக்கை ஸ்காட்லாந்துக்கு நிர்ணயித்துள்ளது. ஷார்ஜாவில் சிக்ஸர் மழை பொழிந்த ஆஃப்கானிஸ்தான் வீரர்கள் மொத்தமாக இந்த இன்னிங்ஸில் 11 சிக்ஸர்களை விளாசினர்.