ஆஃப்கானிஸ்தான் அணி வங்கதேசத்திற்கு சென்று ஒரேயொரு டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிவரும் ஆஃப்கானிஸ்தான் அணி வீரர் ரஹ்மத் ஷா அபாரமாக ஆடி சதமடித்துள்ளார். 

உலக கோப்பை தோல்வி எதிரொலியாக மூன்று விதமான ஆஃப்கானிஸ்தான் கிரிக்கெட் அணிக்கும் ரஷீத் கான் கேப்டனாக நியமிக்கப்பட்டார். ரஷீத் கான் கேப்டனான பிறகு ஆஃப்கானிஸ்தான் அணி ஆடும் முதல் போட்டி இதுதான். இந்த போட்டிக்கு கேப்டனாக செயல்படுவதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டின் இளம் கேப்டன் என்ற பெருமையை ரஷீத் கான் பெற்றுள்ளார். 

டாஸ் வென்ற ஆஃப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் ஆடிவருகிறது. ஆஃப்கானிஸ்தான் அணியின் தொடக்க வீரர் ஈஸானுல்லா ஜனத் வெறும் 9 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து மற்றொரு தொடக்க வீரரான ஜட்ரானும் சோபிக்கவில்லை. ஜட்ரான் 21 ரன்களில் ஆட்டமிழக்க, ஹஷ்மதுல்லா ஷாஹிடியும் 14 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றளித்தார். 

ஆஃப்கானிஸ்தான் அணி 77 ரன்களுக்கே 3 விக்கெட்டுகளை இழந்துவிட்ட நிலையில், அதன்பின்னர் ரஹ்மத் ஷாவுடன் முன்னாள் கேப்டன் அஸ்கர் ஆஃப்கான் ஜோடி சேர்ந்தார். இருவரும் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்து பொறுப்புடன் ஆடி ரன்களை சேர்த்தனர். சிறப்பாக ஆடிய ரஹ்மத் ஷா 97 ரன்களுடன் இருந்த நிலையில், டீ பிரேக்கிற்கு சென்றனர். 

ரஹ்மத் ஷா சிறப்பாக ஆட, அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்து மறுமுனையில் அஸ்கர் ஆஃப்கானும் சிறப்பாக ஆடினார். டீ ப்ரேக் முடிந்து திரும்பி வந்ததும் சதத்தை பூர்த்தி செய்த ரஹ்மத் ஷா, 102 ரன்களில் ஆட்டமிழந்தார். ரஹ்மத் ஷா அவுட்டான பிறகு களத்திற்கு வந்த முகமது நபி மூன்றே பந்துகளில் டக் அவுட்டாகி வெளியேறினார். அஸ்கர் ஆஃப்கான் அரைசதம் கடந்து களத்தில் உள்ளார். அவருடன் அஃப்ஸர் சேஸாய் ஜோடி சேர்ந்துள்ளார். 5 விக்கெட் இழப்பிற்கு 200 ரன்களை கடந்து ஆஃப்கானிஸ்தான் அணி ஆடிவருகிறது.