உலக கோப்பை தொடரில் மிகுந்த நம்பிக்கையுடனும் எதிர்பார்ப்புடனும் இறங்கியது ஆஃபானிஸ்தான் அணி. ஆனால் அந்த அணி ஒரு வெற்றியைக்கூட பெறாமல் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தை பிடித்து தொடரை விட்டு வெளியேறியது. 

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு எதிராக ஆஃப்கானிஸ்தான் அணி வெற்றியை நெருங்கியது. ஆனால் அந்த அணி அனுபவம் குறைந்த அணி என்பதால் வெற்றியை வசப்படுத்த முடியாமல் தோற்றது. குறிப்பாக பாகிஸ்தான் அணிக்கு எதிராக வெற்றி பெற்றிருந்திருக்கலாம். ஆனால் கேப்டன் குல்பாதின் நைபால் தான் அந்த போட்டியில் ஆஃப்கானிஸ்தான் தோற்றது. 

உலக கோப்பைக்கு முன்னதாக திடீரென ஆஃப்கானிஸ்தான் கேப்டன் அஸ்கர் ஆஃப்கான் நீக்கப்பட்டு குல்பாதின் நைப் கேப்டனாக நியமிக்கப்பட்டார். கேப்டன் மாற்றப்பட்டதில் ஆஃப்கானிஸ்தான் வீரர்களுக்கு உடன்பாடு இல்லை என்பதால் அப்போதே ஆஃப்கானிஸ்தான் வீரர்கள் தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர். ஆனால் ஆஃப்கானிஸ்தான் அணியின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக ஆஃப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் விளக்கமளித்தது. 

இதையடுத்து குல்பாதின் நைப் கேப்டன்சியில் உலக கோப்பையில் களமிறங்கிய ஆஃப்கானிஸ்தான் அணி சொதப்பியது. தனக்கு கிடைத்த கேப்டன் பொறுப்பை குல்பாதின் நைப் சரியாக பயன்படுத்தவில்லை. உலக கோப்பையில் படுமோசமாக சொதப்பினார் குல்பாதின் நைப். 

உலக கோப்பை தோல்வி எதிரொலியாக கேப்டன் பதவியிலிருந்து குல்பாதின் நைப் அதிரடியாக நீக்கப்பட்டு, டெஸ்ட், ஒருநாள், டி20 ஆகிய மூன்று அணிகளுக்குமே ரஷீத் கான் கேப்டனாக நியமிக்கப்பட்டார். 

இந்நிலையில், உலக கோப்பை குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் கேப்டன் குல்பாதின் நைப், அணியின் சீனியர் வீரர்கள் பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார். எங்கள் அணி சீனியர் வீரர்களையே அதிகமாக சார்ந்திருக்கிறது. அப்படியிருக்கையில், அவர்கள் வேண்டுமென்றே உலக கோப்பையில் சரியாக ஆடவில்லை. ஒரு கேப்டனாக எனது பேச்சை யாருமே கேட்கவில்லை. ஒவ்வொரு போட்டியிலும் தோற்றதற்கு பின்னர் சோகமாக இருப்பதற்கு பதிலாக அனைவருமே செம ஜாலியாக சிரித்துக்கொண்டிருந்தனர். யாரையாவது பவுலிங் போட அழைக்கும்போது கூட, என்னை கண்டுகொள்ளாமல் இருந்தனர் என்று அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். 

குல்பாதின் நைப் இப்படி பேசியதன் விளைவு எப்படி இருக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.