உலக கோப்பை தொடர் இந்த மாதம் 30ம் தேதி தொடங்குகிறது. உலக கோப்பைக்கான அனைத்து அணிகளும் அறிவிக்கப்பட்டு விட்டன. 

உலக கோப்பைக்கான ஆஃப்கானிஸ்தான் அணிக்கு குல்பாதின் நைப் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அணியின் சீனியர் வீரரான அஸ்கர் ஆஃப்கான் தான் கேப்டனாக செயல்பட்டு வந்தார். அவரது கேப்டன்சியில் ஆஃப்கானிஸ்தான் அணி சிறப்பாகவே ஆடிவந்தது. ஆஃப்கானிஸ்தான் அணிக்கு பல வெற்றிகளை பெற்றுக்கொடுத்த அஸ்கர் ஆஃப்கான் உலக கோப்பைக்கு முன்னதாக திடீரென கேப்டன் பதவியிலிருந்து தூக்கி எறியப்பட்டார்.

அஸ்கர் ஆஃப்கானை உலக கோப்பைக்கு முன்னதாக கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டதை ரஷீத் கான் உள்ளிட்ட அணி வீரர்களே விரும்பவில்லை. அஸ்கர் ஆஃப்கானின் நீக்கத்துக்கு கடும் கண்டனமும் எதிர்ப்பும் தெரிவித்தனர். உலக கோப்பைக்கு முன்னதாக கேப்டனை மாற்றுவது உலக கோப்பையில் அணியின் சூழலை பாதிக்கும் என வீரர்கள் அஞ்சினர். 

அஸ்கர் ஆஃப்கானை நீக்கிவிட்டு குல்பாதின் நைப் தலைமையிலான உலக கோப்பை அணியை ஆஃப்கான் கிரிக்கெட் வாரியம் அறிவித்தது. இந்நிலையில், கேப்டனை மாற்றியது ஏன் என ஆஃப்கானிஸ்தான் அணி தேர்வுக்குழு தலைவர் தவ்லத் கான் அஹ்மத்ஸாய் விளக்கமளித்துள்ளார். 

இதுகுறித்து பேசிய தவ்லத், கேப்டனை மாற்றியது அணி நிர்வாகத்தின் மேலிடத்தில் எடுக்கப்பட்ட முடிவு. ஆஃப்கான் அல்லது நைப் என இருவரில் யார் கேப்டனாக இருந்தாலும் ஆஃப்கானிஸ்தான் எப்படியும் இந்த உலக கோப்பையை வெல்லப்போவதில்லை. எனவே அடுத்த உலக கோப்பைக்கு இப்போதிலிருந்தே தயாராவதுதான் திட்டம். 

அப்படியென்றால், உலக கோப்பைக்கு பின்னர் கேப்டனை மாற்றியிருக்கலாமே என்ற கேள்வி எழலாம். அதற்கும் விளக்கமளித்துள்ளார் தவ்லத். அதாவது ஆஃப்கானிஸ்தான் அணிக்கு இந்த உலக கோப்பையை போன்று அனைத்து சர்வதேச அணிகளுடனும் மோதும் வாய்ப்பு அடிக்கடி கிடைக்காது. எனவே பெரிய அணிகளுக்கு எதிராக புதிய கேப்டனின் திட்டங்கள், செயல்பாடுகள் மற்றும் அவரது கேப்டன்சியில் அணி ஒன்றிணைந்து செயல்படுவது என ஒரு அணியாக இந்த உலக கோப்பையிலிருந்தே மேம்பட்டு ஒரு வலுவான அணியாக அடுத்த உலக கோப்பையில் ஆடுவதற்காகத்தான் கேப்டன்சி மாற்றம் என தவ்லத் விளக்கமளித்துள்ளார்.