உலக கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. முன்னாள் ஜாம்பவான்கள், ரசிகர்கள் என அனைத்து தரப்பினரின் எதிர்பார்ப்பை போலவே இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய 3 அணிகளும் அபாரமாக ஆடி ஆதிக்கம் செலுத்துகின்றன. 

இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய மூன்று அணிகளுமே அரையிறுதிக்குள் நுழைவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. இவை தவிர நான்காவதாக நியூசிலாந்து அணி அபாரமாக ஆடிவருகிறது. தென்னாப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான், இலங்கை ஆகிய அணிகள் உலக கோப்பையில் மோசமாக ஆடிவருகின்றன. 

வளர்ந்துவரும் அணியாக இருக்கும் ஆஃப்கானிஸ்தான் அணியை அனைத்து அணிகளும் அடித்து நொறுக்குகின்றன. இப்படித்தான் நடக்கும் என்பது தெரிந்த விஷயம்தான். ஆஃப்கானிஸ்தான் அணிக்கே தாங்கள் அடிவாங்குவோம் என்பது தெரியும். ஏனெனில் உலக கோப்பையில் ஆடிய நீண்ட அனுபவம் வாய்ந்த மற்ற 9 அணிகளையும் வீழ்த்துவது ஆஃப்கானிஸ்தான் அணிக்கு கடினம்.

இங்கிலாந்துக்கு எதிரான நேற்றைய போட்டியில் 150 ரன்கள் வித்தியாசத்தில் மண்ணை கவ்வியது ஆஃப்கானிஸ்தான் அணி. முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 397 ரன்களை குவித்தது. 398 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஃப்கானிஸ்தான் அணியை வெறும் 247 ரன்களுக்கு சுருட்டி 150 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது இங்கிலாந்து. 

இந்த போட்டிக்கு முந்தைய நாள் மான்செஸ்டரில் ஒரு ஹோட்டலில் ஆஃப்கானிஸ்தான் வீரர்கள் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது அங்கிருந்த ரசிகர் ஒருவர் அவர்களை வீடியோ எடுத்துள்ளார். அதற்கு ஆஃப்கான் வீரர்கள் எதிர்ப்பு தெரிவிக்க, சலசலப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அங்கு போலீஸ் வந்ததாகவும் பிபிசி செய்தி வெளியிட்டது. 

இதன் அடிப்படையில், போட்டிக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆஃப்கானிஸ்தான் கேப்டன் குல்பாதின் நைபிடம் இதுகுறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த குல்பாதின் நைப், அதுகுறித்து எனக்கு எதுவும் தெரியாது. இதனால் அணிக்கோ எனக்கோ எந்த பாதிப்புமே கிடையாது. அதுகுறித்து எனக்கு எதுவுமே தெரியாது. இதுகுறித்து செக்யூரிட்டி ஆஃபிஸரிடம் வேண்டுமானால் கேளுங்கள். இதுகுறித்து வேறு யாராவது கேள்வி எழுப்பினால், நான் பிரஸ் மீட்டை முடித்துவிட்டு எழுந்து வெளியே சென்றுவிடுவேன் என்று நைப் தெரிவித்தார்.