ஜிம்பாப்வே மற்றும் ஆஃப்கானிஸ்தான் ஆகிய இரு அணிகளும் வங்கதேசத்திற்கு சென்று முத்தரப்பு தொடரில் ஆடிவருகிறது. 

இந்த தொடரில் வங்கதேசம் மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான முதல் போட்டியில் வங்கதேச அணி வெற்றி பெற்றது. இதையடுத்து இரண்டாவது போட்டியில் ஆஃப்கானிஸ்தான் மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இரண்டாவது போட்டி நேற்று நடந்தது. 

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ஆஃப்கானிஸ்தான் அணி 20 ஓவரில் 197 ரன்களை குவித்தது. ஆஃப்கானிஸ்தான் அணியின் தொடக்க வீரர் ரஹ்மதுல்லா குர்பாஸ் 43 ரன்களை குவித்தார். ஆனால் மற்றொரு தொடக்க வீரரான ஹஸ்ரதுல்லா சேஸாய், அஸ்கர் ஆஃப்கான் மற்றும் நஜீப் ஆகிய மூவரும் சரியாக ஆடவில்லை. 

அதன்பின்னர் ஜோடி சேர்ந்த முகமது நபியும் நஜிபுல்லா ஜட்ரானும் ஜிம்பாப்வே அணியின் பவுலிங்கை வெளுத்துவாங்கிவிட்டனர். அதிரடியாக ஆடி ரன்களை குவித்தனர். டெண்டாய் சடாரா வீசிய 17வது ஓவரின் கடைசி 4 பந்துகளில் முகமது நபி தொடர்ச்சியாக 4 சிக்ஸர்களை விளாசினார். அதைத்தொடர்ந்து மாட்சிவா வீசிய அடுத்த ஓவரின் முதல் 3 பந்துகளையும் சிக்ஸர் விளாசினார் ஜட்ரான். நபியும் ஜட்ரானும் இணைந்து தொடர்ச்சியாக 7 சிக்ஸர்களை விளாசி 7 பந்துகளில் 42 ரன்களை குவித்துவிட்டனர். 

ஜட்ரான் வெறும் 30 பந்துகளில் 5 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்களுடன் 69 ரன்களை குவித்தார். முகமது நபி, 18 பந்துகளில் 4 சிக்ஸர்களுடன் 38 ரன்களை குவித்தார். இவர்களின் அதிரடியால் ஆஃப்கானிஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 197 ரன்களை குவித்தது. 

198 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய ஜிம்பாப்வே அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்கள் அடித்தது. இதையடுத்து 28 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது ஆஃப்கானிஸ்தான் அணி. ஆஃப்கானிஸ்தான் அணி சார்பில் ரஷீத் கான் மற்றும் ஃபரீத் மாலிக் ஆகிய இருவரும் அதிகபட்சமாக தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

ரஷீத் கானின் கேப்டன்சியில் ஆடிய முதல் டெஸ்ட் போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணி வென்ற நிலையில், தற்போது அவரது தலைமையில் ஆடிய முதல் டி20 போட்டியிலும் ஆஃப்கானிஸ்தான் அணி வென்றுள்ளது.