Asianet News TamilAsianet News Tamil

வங்கதேசத்தின் பக்கம் இருந்த அதிர்ஷ்டத்தையும் மீறி திறமையால் வென்ற ஆஃப்கானிஸ்தான்.. கத்துக்குட்டிக்கு அபார வெற்றி

வங்கதேச அணிக்கு எதிரான ஒரேயொரு டெஸ்ட் போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணி 224 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. 

afghanistan beat bangladesh in only test
Author
Bangladesh, First Published Sep 9, 2019, 5:28 PM IST

வங்கதேச அணிக்கு எதிரான ஒரேயொரு டெஸ்ட் போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணி 224 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. 

இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஃப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் ஆடியது. ரஹ்மத் ஷாவின் அபார சதம், அஸ்கர் ஆஃப்கான் மற்றும் ரஷீத் கானின் பொறுப்பான அரைசதத்தால், ஆஃப்கானிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 342 ரன்களை குவித்தது. 

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய வங்கதேச அணியின் டாப் ஆர்டர்கள் சோபிக்காத நிலையில், அந்த அணியின் முக்கியமான தலைகளான ஷகிப் அல் ஹசன், மஹ்மதுல்லா, முஷ்ஃபிகுர் ரஹீம் ஆகிய மூவரையும் நிலைக்கவிடாமல் ரஷீத் கான் வீழ்த்திவிட்டார். இவர்கள் மூவர் உட்பட மொத்தம் 5 விக்கெட்டுகளை ரஷீத் கான் வீழ்த்தினார். முகமது நபி தன் பங்கிற்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்த, ஆஃப்கான் ஸ்பின்னர்களிடம் மளமளவென விக்கெட்டுகளை இழந்த வங்கதேச அணி, முதல் இன்னிங்ஸில் 205 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 

afghanistan beat bangladesh in only test

137 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய ஆஃப்கானிஸ்தான் அணி, இரண்டாவது இன்னிங்ஸில் 260 ரன்கள் அடித்து மொத்தமாக 397 ரன்கள் முன்னிலை பெற்றது. 

398 ரன்கள் என்ற இலக்குடன் இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய வங்கதேச அணி, இரண்டாவது இன்னிங்ஸிலும் பேட்டிங்கில் சோபிக்கவில்லை. நான்காம் நாள் ஆட்ட முடிவில் வங்கதேச அணி 6 விக்கெட் இழப்பிற்கு 136 ரன்கள் மட்டுமே அடித்திருந்தது. 

கடைசி நாள் ஆட்டத்தில் ஆஃப்கானிஸ்தான் அணி வெற்றி பெற, வெறும் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினால் போதும் என்றிருந்ததால், ஆஃப்கானிஸ்தான் அணி வெற்றி உறுதியானது. ஆனால் கடைசி நாள் ஆட்டத்தின் இரண்டு சீசன்கள் மழையால் பாதிக்கப்பட்டது. தொடர் மழையால் மாலை 4 மணிக்குத்தான் ஆட்டம் தொடங்கியது. வெறும் 20 ஓவர்கள் மட்டுமே பந்துவீசும் நிலை உருவானது. அதனால் அதற்குள் 4 விக்கெட்டுகளை வீழ்த்தியாக வேண்டிய கட்டாயத்தில் ஆஃப்கானிஸ்தான் அணி இருந்தது. 

afghanistan beat bangladesh in only test

ஒருநாளில் முக்கால்வாசி ஆட்டத்துக்கு மேல் பாதிக்கப்பட்டும் கூட, ஆஃப்கானிஸ்தான் அணி மனதை தளரவிடாமல் விக்கெட்டுகளை வீழ்த்தியது. ஷகிப் அல் ஹசனின் விக்கெட்டை வீழ்த்தி ஜாகிர் கான் பிரேக் கொடுத்தார். அதன்பின்னர் எஞ்சிய மூன்று விக்கெட்டுகளையும் ரஷீத் கான் வீழ்த்திவிட்டார். இதையடுத்து வங்கதேச அணி 173 ரன்களுக்கே ஆல் அவுட்டானதால் 224 ரன்கள் வித்தியாசத்தில் ஆஃப்கானிஸ்தான் அணி அபார வெற்றி பெற்றது. 

இதுவரை மூன்று டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே ஆடியுள்ள ஆஃப்கானிஸ்தான், இரண்டு வெற்றிகளை பெற்றுள்ளது. முதல் இன்னிங்ஸில் அரைசதம் அடித்ததுடன் 5 விக்கெட்டுகளையும் வீழ்த்திய ஆஃப்கானிஸ்தான் கேப்டன் ரஷீத் கான், இரண்டாவது இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். சொந்த மண்ணில் கத்துக்குட்டி அணியான ஆஃப்கானிஸ்தானிடம் படுதோல்வி அடைந்து அசிங்கப்பட்டுள்ளது வங்கதேசம். 

Follow Us:
Download App:
  • android
  • ios