வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் தொடரை இழந்துவிட்ட ஆஃப்கானிஸ்தான் அணி, கடைசி ஒருநாள் போட்டியில் ஆறுதல் வெற்றி பெற்றது.
ஆஃப்கானிஸ்தான் அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது. முதலில் ஒருநாள் தொடர் நடந்தது. ஒருநாள் தொடரை 2-1 என வங்கதேசம் வென்றது.
முதலிரண்டு ஒருநாள் போட்டிகளில் வெற்றி பெற்று வங்கதேச அணி ஒருநாள் தொடரை வென்றுவிட்ட நிலையில், கடைசி ஒருநாள் போட்டி இன்று நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய வங்கதேச அணியில் தொடக்க வீரர் லிட்டன் தாஸ் மட்டுமே அபாரமாக விளையாடி 86 ரன்கள் அடித்தார். தமீம் இக்பால்(11), ஷகிப் அல் ஹசன் (30), முஷ்ஃபிகுர் ரஹீம் (7), யாசிர் அலி(1) ஆகிய வீரர்கள் ஒருமுனையில் ஆட்டமிழக்க, மறுமுனையில் நிலைத்து ஆடி அரைசதம் அடித்த லிட்டன் தாஸ் 86 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
அதன்பின்னர் சீனியர் வீரர் மஹ்மதுல்லா மட்டும் ஒருமுனையில் நிலைத்து நிற்க, பின்வரிசை வீரர்கள் அனைவருமே ஒற்றை இலக்கத்தில் மளமளவென ஆட்டமிழக்க, 46.5 ஓவரில் 192 ரன்களுக்கு ஆல் அவுட்டானது வங்கதேச அணி. மஹ்மதுல்லா 29 ரன்களுடன் கடைசி வரை களத்தில் நின்றார்.
193 ரன்கள் என்ற எளிய இலக்கை விரட்டிய ஆஃப்கானிஸ்தான் அணியின் தொடக்க வீரர் ரஹ்மானுல்லா குர்பாஸ் மிகச்சிறப்பாக பேட்டிங் ஆடி சதமடித்து (106) கடைசிவரை களத்தில் நின்று ஆஃப்கானிஸ்தான் அணிக்காக போட்டியை முடித்து கொடுத்தார். அவரது பொறுப்பான சதத்தால் 41வது ஓவரிலேயே இலக்கை எட்டி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது ஆஃப்கானிஸ்தான் அணி. ஏற்கனவே ஒருநாள் தொடரை இழந்துவிட்ட ஆஃப்கானிஸ்தான் அணிக்கு இது ஆறுதல் வெற்றியே.
இந்த போட்டியின் ஆட்டநாயகனாக ரஹ்மானுல்லா குர்பாஸும், தொடர் நாயகனாக லிட்டன் தாஸும் தேர்வு செய்யப்பட்டனர்.
