Asianet News TamilAsianet News Tamil

Asia Cup: நஜிபுல்லா ஜட்ரான் காட்டடி ஃபினிஷிங்.! வங்கதேசத்தை வீழ்த்தி சூப்பர் 4-க்கு முன்னேறியது ஆஃப்கானிஸ்தான்

ஆசிய கோப்பை தொடரில் வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற ஆஃப்கானிஸ்தான் அணி முதல் அணியாக சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
 

afghanistan beat bangladesh by 7 wickets and qualify for super 4 round of asia cup 2022
Author
First Published Aug 30, 2022, 11:01 PM IST

ஆசிய கோப்பை கிரிக்கெட்  தொடரில் முதல் போட்டியில் இலங்கையை வீழ்த்தி அபார வெற்றி பெற்றிருந்த ஆஃப்கானிஸ்தான் அணி, இன்று வங்கதேசத்தை எதிர்கொண்டது. ஷார்ஜாவில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

வங்கதேச அணி:

முகமது நைம், அனாமுல் ஹக், ஷகிப் அல் ஹசன் (கேப்டன்), அஃபிஃப் ஹுசைன், முஷ்ஃபிகுர் ரஹீம் (விக்கெட் கீப்பர்), மொசாடெக் ஹுசைன், மஹ்மதுல்லா மஹெடி ஹசன், முகமது சைஃபுதின், டஸ்கின் அகமது, முஸ்தாஃபிசுர் ரஹ்மான். 

இதையும் படிங்க - Asia Cup 2022: பாண்டியா பட்டைய கெளப்பிட்டாப்ள..! பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் புகழாரம்

ஆஃப்கானிஸ்தான் அணி:

ஹஸ்ரதுல்லா சேஸாய், ரஹ்மானுல்லா குர்பாஸ் (விக்கெட் கீப்பர்), இப்ராஹிம் ஜட்ரான், நஜிபுல்லா ஜட்ரான், கரிம் ஜனத், முகமது நபி (கேப்டன்), ரஷீத் கான், அஸ்மதுல்லா ஓமர்ஸாய், நவீன் உல் ஹக், முஜீபுர் ரஹ்மான், ஃபஸல்ஹக் ஃபரூக்கி.

முதலில் பேட்டிங் ஆடிய வங்கதேச அணியின் பேட்டிங் ஆர்டரை ஆஃப்கான் ஸ்பின்னர்களான ரஷீத் கானும் முஜிபுர் ரஹ்மானும் இணைந்து சரித்தனர். ரஷீத் - முஜிபுர் ஜோடியின் சுழலை எதிர்கொள்ள முடியாமல் திணறிய வங்கதேச வீரர்கள் மளமளவென ஆட்டமிழக்க, 89 ரன்களுக்கே 6 விக்கெட்டுகளை இழந்துவிட்டது வங்கதேச அணி.

பின்வரிசையில் மொசாடெக் ஹுசைன் அடித்து ஆடி 31 பந்தில் 48 ரன்கள் அடித்தார். மஹ்மதுல்லாவும் 25 ரன்கள் அடிக்க, 20 ஓவரில் 127 ரன்களையாவது எட்டியது வங்கதேச அணி. ரஷீத் கான் மற்றும் முஜிபுர் ரஹ்மான் ஆகிய இருவரும் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதையும் படிங்க - சூர்யகுமார் யாதவுக்கு முன் என்னை பேட்டிங் ஆட இறக்கிவிட்டதற்கு இதுதான் காரணம்..! ஜடேஜா விளக்கம்

128 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய ஆஃப்கானிஸ்தான் அணியை தொடக்கம் முதலே எளிதாக ரன் அடிக்கவிடாமல் கட்டுப்படுத்தினர் வங்கதேச பவுலர்கள். 13 ஓவரின் கடைசி பந்தில் முகமது நபியின் விக்கெட்டை 3வது விக்கெட்டாக இழக்கும்போது ஆஃப்கான் அணியின் ஸ்கோர் வெறும் 62 ரன்கள் தான். 

அதன்பின்னர் களத்திற்கு வந்த நஜிபுல்லா ஜட்ரான், 17 பந்தில் 6 சிக்ஸர்களை விளாசி 43 ரன்களை வேகமாக அடித்து 18.3 ஓவரிலேயே இலக்கை எட்டி ஆஃப்கானிஸ்தான் அணியை வெற்றி பெற செய்தார். 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற ஆஃப்கானிஸ்தான் அணி முதல் அணியாக சூப்பர் 4 சுற்றுக்கு தகுதிபெற்றுள்ளது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios